செங்கல்பட்டில் 330 ஏக்கரில் மருத்துவப் பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா (மெடி பார்க்) அமைக்க 330 ஏக்கர் அரசு நிலத்தை "துணை குத்தகை' அடிப்படையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

நாட்டிலேயே முதல் முறையாக செங்கல்பட்டில் மருத்துவப் பூங்கா (மெடி பார்க்) அமைக்க 330 ஏக்கர் அரசு நிலத்தை "துணை குத்தகை' அடிப்படையில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி கூறியது:

"மினி ரத்னா' நிறுவனம்: கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் பொதுத் துறை "மினி ரத்னா' அந்தஸ்து கொண்ட ஹெச்.எல்.எல் லைஃப்கேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள், டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைக் கருவிகள், மலிவு விலையில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவற்றை ஹெச்.எல்.எல் லைஃப்கேர் நிறுவனம் தயாரித்து வருகிறது. மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறையின் கீழ் இந்த மத்திய பொதுத் துறை நிறுவனம் செயல்படுகிறது.

இந்நிலையில் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் அரசுக்குச் சொந்தமான 330.10 ஏக்கர் நிலத்தை ஹெச்.எல்.எல்.லைஃப்கேர் நிறுவனத்துக்கு துணை குத்தகை (சப் லீஸ்) அடிப்படையில் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்த நிலத்தில் மருத்துவப் பூங்கா அமைக்கும் திட்டத்தை ஹெச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனம் செயல்படுத்தும்.

ஏழு ஆண்டுகள்: உள்ளூரிலேயே குறைந்த விலையில், தரமான பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை சிறந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கும் நோக்குடன் இந்த மருத்துவப் பூங்கா உருவாக்கப்படும். இத்தகைய பூங்கா அமைவது நாட்டிலேயே முதல் முறையாகும். பிரதமரின் "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முழக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இத்திட்டம் பகுதி, பகுதியாகச் செயல்படுத்தப்படும். இத்திட்டம் முழுமை பெற ஏழு ஆண்டுகள் ஆகலாம்.

முதல் கட்டமாக, முதல் இரண்டு ஆண்டுகளில் மருத்துவப் பூங்காவுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். மூன்றாவது ஆண்டு முதல் நிலத்தின் மனைகள் துணை குத்தகை அடிப்படையில் ஹெச்.எல்.எல். லைஃப்கேர் வசம் வழங்கப்படும். இரண்டாம் கட்டமாக, அறிவுசார் மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் இருந்து மானியம் பெற்று ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்படும்.

அரசு மானியம்: அதன் பிறகு மருத்துவப் பூங்காவில் தரமான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் ஆலைகள், ஆய்வுக் கூடங்களைத் திறக்க வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் வரவேற்கப்படும். தொடக்க காலத்தில் மருத்துவப் பூங்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புச் சலுகைகள், அரசு மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும். பூங்கா முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்ததும் அரசு மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு முதலீடுகள் வரவேற்கப்படும். இந்த மருத்துவப் பூங்கா திட்டம் அமலாக்கப்படும் காலத்திலேயே உள்ளூர் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றார் உயரதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com