ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வுக்கு உயர் நீதிமன்றம் தடை: கடந்த ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க உத்தரவு

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்த கட்டண உயர்வுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டது.
ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வுக்கு உயர் நீதிமன்றம் தடை: கடந்த ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க உத்தரவு

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்த கட்டண உயர்வுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து புதன்கிழமை உத்தரவிட்டது.

 தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (நீதி) பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

 இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்குரைஞர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

 இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்துத் துறை இணை ஆணையர் பாலன் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கின்றனர். அதை வரையறுப்பதற்கான சட்டங்கள் ஏதும் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

 இதற்கு அவர், பயணிகளின் புகார்களின் அடிப்படையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு தனிச்சட்டம் இல்லை என்றும் தெரிவித்தார். மூத்த வழக்குரைஞர் ஐசக் மோகன்லால், தமிழக அரசின் மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான விதிமுறைகள் உள்ளதாகத் தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மும்பை நீதிமன்றம் பொதுநல வழக்கு ஒன்றில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதாக பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டினர்.

 அப்போது, மதுரை மாவட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், கட்டணம் நிர்ணயம் தொடர்பான அரசாணை இல்லாத காரணத்தால், ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் சார்பில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்துக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 800 வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஓட்டுநர் ஊதியம், பெட்ரோல், டீசல் உயர்வு, சுங்க வரி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்றார்.

 இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்ற சந்தேகம் உள்ளபோது, இப்போது விலை அதிகரித்துள்ளதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஏற்க முடியாது. இதுதொடர்பாக நிபுணர்கள் ஆலோசனை பெறுவது அவசியம். எனவே, அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கடந்த ஆண்டு தீபாவளிக்கு வசூலித்த கட்டணத்தையே இந்த தீபாவளியின்போதும் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த உத்தரவை போக்குவரத்து ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.

 அதேபோல, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கூறி விசாரணையை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அடுத்த விசாரணையின்போது, கட்டண நிர்ணயம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com