காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் மக்கள் நல கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளிக்கும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.
தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளிக்கும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலர் ரவிக்குமார் ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அவரும் மாநிலங்களவை மார்க்சீய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜனும் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு 1990-இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பு 2007, பிப்ரவரியில் 5-ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே அத்தீர்ப்பின் விவரம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆசியக் கண்டத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை டெல்டா, தற்போது "பிச்சை பாத்திரம்' ஏந்தும் மோசமான நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக குடியரசுத் தலைவரிடம் முறையிட்டோம். கர்நாடகத்தில் புதிதாக இரு அணைகள் கட்ட ரூ.5,700 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடகத்தை மறைமுகமாக மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காத அபாய நிலை ஏற்படும்.
இதேபோல புதிய அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் மத்திய அரசின் நடவடிக்கையும் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படும். இந்த விஷயங்களை குடியரசுத் தலைவரிடம் விளக்கினோம் என்றார் வைகோ.
இதையடுத்து டி.ராஜா கூறுகையில்,"காவிரி நதி மீது எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலமும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.
தமிழகத்தின் நியாயமான உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமானால், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். இது தொடர்பான கோப்புகளை வரவழைத்து இப்பிரச்னையில் தலையிடுவதாக குடியரசுத் தலைவர் கூறினார்' என்றார்.
முன்னதாக, குடியரசுத் தலைவரிடம் கூட்டணித் தலைவர்கள் அளித்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: காவிரி நடுவர் மன்றப்க் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை.
இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தர வேண்டிய 192 டிஎம்சி நீரைத் கர்நாடக அரசு அளிக்காததால், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை, சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 24 லட்சம் ஏக்கர் நிலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிர் சாகுபடி நடைபெறவில்லை. இதனால், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சம்பா பயிர் சாகுபடி இன்மையால் ரூ.4,800 கோடி, குறுவை பயிர் சாகுபடியின்மையால் ரூ.2,800 கோடி உள்பட மொத்தம் சுமார் ரூ.8,000 கோடி அளவுக்கு தமிழகத்திற்கு வருடாந்திர இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com