மின்வாரிய நிதி சுமையைக் குறைக்குமா உதய்?சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மத்திய அரசின் உதய் திட்டத்தில் ("உஜ்வல் டிஸ்காம்' உறுதியளிப்பு) தமிழகம் இணைவதாக உள்ள தகவலைத் தொடர்ந்து, அதனுடைய சிறப்பு அம்சங்கள் குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

மத்திய அரசின் உதய் திட்டத்தில் ("உஜ்வல் டிஸ்காம்' உறுதியளிப்பு) தமிழகம் இணைவதாக உள்ள தகவலைத் தொடர்ந்து, அதனுடைய சிறப்பு அம்சங்கள் குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன் சுமை உள்ள நிலையில், கடன் சுமை குறையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியதையடுத்து, உதய் திட்டத்தில் தமிழகம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், திட்டத்திலுள்ள சிறப்பு அம்சங்களின் விவரம்:-
2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, மின் பகிர்மான நிறுவனங்களின் 75 சதவீத கடன்களை மாநில அரசுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் முறையே 50 சதவீத கடன்களையும், 25 சதவீத கடன்களையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2015-16, 2016-17ஆம் நிதியாண்டுகளுக்கான மாநிலங்களுக்கான நிதி பற்றாக்குறை கணக்கீடுகளில் உதய் திட்டத்தில் மாநிலங்கள் எடுத்துக் கொண்ட கடன் பொறுப்புகள் சேர்க்கப்பட மாட்டாது. இதனால் கடன் விவரங்கள் மிகைப்படுத்திக் காட்டப்படாது.
பத்திரங்கள் வழங்கும்: மின்சார பகிர்வு நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக மாநில அரசுகள் பத்திரங்கள் வழங்க வேண்டும். அல்லது வெளிச்சந்தையில் வழங்கி அவற்றுக்கு உரிய பணம் செலுத்த வேண்டும்.
மாநிலங்களால் எடுத்துக் கொள்ளாமல் விடப்படும் மின்சார பகிர்மான நிறுவனங்களின் கடன்களை அவற்றை வழங்கிய வங்கிகள், நிறுவனங்கள் வங்கியின் அடிப்படை வட்டி விகித அளவுக்கு மாற்றி அமைக்க வேண்டும்.
மாற்றுத் திட்டமாக மின்சார பகிர்மான நிறுவனங்களே இந்தக் கடன்களை முழுமையாகவோ, பகுதியாகவோ மாநில அரசு உறுதியளிப்பு பெற்ற பத்திரங்களாக சந்தை விலைக்கு வழங்கி வங்கிகளின் வட்டி விகிதம் அல்லது அதற்கு குறைவான வட்டியை செலுத்த வேண்டும்.
மாநிலங்கள் மின்சார பகிர்மான நிறுவனங்களின் எதிர்கால இழப்புகளை கட்டம், கட்டமாக தாங்களே எடுத்துக் கொண்டு அவற்றுக்கு நிதி வழங்க வேண்டும். அதன்படி, நிகழாண்டில் 5 சதவீதத்தில் இருந்து தொடங்கி 2018-19 ஆம் நிதியாண்டில் 25 சதவீதம் வரை இழப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்மைகள் என்ன? திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல்-முன்னுரிமை நிதியுதவி அளிக்கப்படும். இந்த நிதியுதவிகள் தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டம், ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுத் திட்டம், மின்சாரத் துறை மேம்பாட்டுத் திட்டம் போன்ற மத்திய மின்சார அமைச்சகம், புதிய-புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் மூலம் வழங்கப்படும்.
மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட விலைகளில் கூடுதல் நிலக்கரி வழங்கப்படும். அதிக மின்திறன் பயன்பாடு இருக்கும் மாநிலங்களுக்கு தேசிய அனல் மின்சக்திக் கழகம், இதர மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் குறைந்த விலைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com