தீபாவளி: கோயம்பேடு உள்ளிட்ட 3 இடங்களில் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் திறப்பு

தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவர வசதியாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முன்பதிவு மையங்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முன்பதிவு மையங்கள்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவர வசதியாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள் உள்பட 29 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரும் 29 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவர வசதியாக, அக்டோபர் 26 -ஆம் தேதி 3,254 பேருந்துகள், 27 -ஆம் தேதி 3,992 பேருந்துகள், 28 -ஆம் தேதி 3,979 பேருந்துகள் என மொத்தம் 11,225 சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்- சானடோரியம், பூந்தமல்லி, அண்ணாநகர் மேற்கு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு என 5 இடங்களிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அந்தந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 10 ஆயிரத்து 64 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
29 கவுன்ட்டர்கள் திறப்பு: பயணிகள் முன்பதிவு செய்ய வசதியாக, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள், தாம்பரம் - சாணடோரியத்தில் 2 முன்பதிவு மையங்கள், பூந்தமல்லியில் ஒரு முன்பதிவு மையம் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கவுன்ட்டர்களில் காலை 7 மணி -இரவு 10 மணிவரை பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
நாளை முதல் இயக்கம்: சிறப்பு பேருந்துகள் 26-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. இதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள சிறப்பு கவுன்ட்டர்களில் 300 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் திங்கள்கிழமை முதல் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.
டோக்கன் வரிசைப்படி: 300 கி.மீ. தொலைவுக்கு குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்ல முன்பதிவு கிடையாது.
இந்தப் பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் நாளில் பேருந்து நிலையங்களுக்குச் சென்றால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன்படி அவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.
குறுஞ்செய்தி தகவல்: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 4 தாற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, 2 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்தோருக்கு பேருந்து நிறுத்த மாற்றங்கள் குறித்து செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்பட உள்ளதாக முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com