தீபாவளி பட்டாசுகளை மாணவர்கள் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள்

தீபாவளியையொட்டி மாணவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன்

சென்னை: தீபாவளியையொட்டி மாணவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி சிறியவர்களும், பெரியவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ளும் வேளையில் கவனமாக பாதுகாப்பான முறையில் மாணவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தவறுதல் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட ஏதுவாக உள்ளது.
எனவே, விபத்துக்கள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட பள்ளி மாணவ-மாணவியர் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டன், டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.
- பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள்.
- பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம்.
- மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்க செய்யாதீர்கள்.
- ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
- பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.
- பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
- குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
- நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவேண்டாம்.
- விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையில் பட்டாசுகளை கொளுத்தாதீர்.
- பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ செய்யாதீர்கள்.
- அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் நாள்தோறும் பள்ளியின் காலை இறைவணக்கத்திற்கு பிறகோ அல்லது அணி திரளும்போதோ தோராயமாக 5 நிமிடங்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவுரையாற்ற வேண்டும். செயல் முறை விளக்கம் அளிக்கவேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com