கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டிய கரும்பு விவசாயிகளை போராட்டக் களத்திற்குத் தள்ளாமல் கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டிய கரும்பு விவசாயிகளை போராட்டக் களத்திற்குத் தள்ளாமல் கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகை ரூபாய் 2,000 கோடியை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு கூட்டுறவு சக்கரை ஆலைகளில் 350 கோடி ரூபாயும், தனியார் சர்க்கரை ஆலைகளில் 1,650 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருப்பதாக கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறி வருகிறார்கள். இந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரி இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஆனாலும் வேளாண் துறை அமைச்சரோ, சர்க்கரை துறை ஆணையரோ கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைகளிடம் உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் 1 டன் சர்க்கரை விலை 38,000 ரூபாய் வரை உயர்ந்தும் கூட விவசாயிகளின் பாக்கித் தொகையை வழங்க தனியார் சர்க்கரை நிறுவனங்கள் ஏன் முன் வரவில்லை என்று கரும்பு விவசாயிகள் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

விவசாயிகள், “நாங்கள் வாங்கிய  பயிர் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அந்த பயிர் கடன் பெற  அடமானம் வைத்த நகைகளை மீட்க இயலவில்லை. இதனால் எங்கள் குடும்பங்களில் இருந்த ஒன்றிரண்டு நகைகளும் இன்றைக்கு ஏலம் போய்க் கொண்டிருக்கிறது” என்று வேதனைப்படுகிறார்கள்.

ஆகவே, இனியும் தாமதிக்காமல் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்து உடனடியாக கரும்பு விவசாயிகளையும், கரும்பு விவசாய சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வரின் இலாகாக்களை கவனித்து வரும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டிய கரும்பு விவசாயிகளை இப்படி போராட்டக் களத்திற்கு தள்ள வேண்டாம் என்றும் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com