பிரசவித்த தாய்மார்களுக்கான 102 தொலைபேசி சேவை விரைவில் தொடக்கம்

பிரசவித்த தாய்மார்களுக்கான பிரத்யேக தொலைபேசி சேவை எண் 102 விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பிரசவித்த தாய்மார்களுக்கான 102 தொலைபேசி சேவை விரைவில் தொடக்கம்

பிரசவித்த தாய்மார்களுக்கான பிரத்யேக தொலைபேசி சேவை எண் 102 விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஆம்புலன்ஸ் சேவைக்கு 108, தொலைபேசி மருத்துவச் சேவைக்கு 104 என்பது போல, இந்தச் சேவைக்கு 102 என்ற எண் நிர்ணயிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனை பிரசவங்களை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசின் "ஜனனி சிசு சுரக் ஷா கார்யாக்ரம்' திட்டம் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி, பல்வேறு அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஒரு பெண் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்கு செல்வது முதல், பிரசவம் முடிந்து வீடு திரும்புவது வரையிலான அனைத்துச் செலவுகளையும் இலவசமாக வழங்குவது, மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சமயம் வழங்கப்படும் மருந்துகள், பரிசோதனைகள், உணவு என அனைத்தையும் இலவசமாக வழங்குவது, 30 நாள்களிலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இலவசமாக வீடு செல்வது உள்ளிட்டவை திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் 1.20 கோடி தாய்மார்களுக்கு இந்தச் சேவையை அளிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில்: தமிழகத்தைப் பொருத்தவரை, இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான சேவைகள் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு மருத்துவமனையின் மூலம் மட்டுமே இயக்கப்பட்டு வந்த இந்தச் சேவையை, பொதுமக்கள் தாங்களே குறிப்பிட்ட எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு இதை விரிவுபடுத்த உள்ளது.
102 சேவை: இந்தச் சேவைக்கென்று பொதுமக்கள் எளிதில் நினைவில் கொள்ளும்படியான 102 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத் துறை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதிக் கடிதம் வழங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்பாட்டு மையம்: இதற்கான கட்டுப்பாட்டு மையம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்களை இலவசமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் சேவையை வழங்கி வரும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், இந்தச் சேவையையும் வழங்க உள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
பரிசோதனைத் திட்டமாக சென்னை, அதைச் சுற்றியுள்ள 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும். அதன்பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
102 தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்வதன் மூலம், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்கள் இலவசமாக வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும், பிறந்து 30 நாள்களிலிருந்து ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பிறகு வீடுகளுக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவர் என்றார் அவர்.
தனியார் மருத்துவமனைகளில்..: 102 சேவையை முழுவீச்சில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com