"மதுரை-ராமேசுவரம் இடையே மின்சார ரயில் இயக்க பரிசீலனை'

மதுரை முதல் ராமேசுவரம் வரை மின்சார ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக, தெற்கு ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தார்.

மதுரை முதல் ராமேசுவரம் வரை மின்சார ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக, தெற்கு ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தூக்கு பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றப்பட்டு ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதை ஆய்வு செய்த ரயில்வே பாலங்கள் பிரிவு தலைமைப் பொறியாளர் சுயம்புலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாம்பன் தூக்கு பாலத்தின் வலு 6 டன் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் ரயில் கடந்து செல்லும்போது அதிர்வுத் தன்மையை அறிய பாலத்தில் 14 இடங்களில் ஆய்வுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் அதிர்வுகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை கண்டறிந்து எந்தப் பகுதியில் கடல் காற்றால் அரிப்புத் தன்மை ஏற்பட்டு வலு குறைந்துள்ளதோ அந்தப் பகுதியில் கூடுதலாக இரும்பு பட்டைகள் பொருத்தப்படும்.
மதுரை முதல் ராமேசுவரம் வரை மின்சார ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. ஆதலால் புதிய தூக்கு பாலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரயில் பாலத்தில் கடல் காற்றால் சேதமடைந்த 71 இரும்பு கர்டர்களில் 2015-ஆம் ஆண்டு முதல் கட்டமாக 28 கர்டர்கள் மாற்றப்பட்டன. தற்போது ரயில்வே பாலத்தில் ரூ. 6 கோடியில் 16 கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 27 கர்டர்களை ரூ. 11 கோடியில் அடுத்த ஆண்டு மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கர்டர்கள் மாற்றும் பணிகள் முடிந்தவுடன் 30 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
மேலும் புதிதாக மாற்றப்படும் கர்டர்களில் அதிநவீன ரசாயனம் கலந்த வர்ணம் பூசப்பட்டுள்ளதால் கடல் காற்றின் அரிப்பு தன்மை ஏற்பட்டாலும் 15 ஆண்டுகளுக்கு சேதமடையாது. சேது சமுத்திர திட்டப் பணிகள் தொடங்கும்போது பாம்பன் ரயில் பாலத்தின் மாற்றம் குறித்து மத்திய அரசுக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com