விரைவில் வீடு திரும்புவார் முதல்வர் ஜெயலலிதா

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதால்...
விரைவில் வீடு திரும்புவார் முதல்வர் ஜெயலலிதா

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதால், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்து சிகிச்சைத் தொடர்பான செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தனர். இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முதல்வருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் கூடியுள்ளனர். இதனால் மருத்துவமனை பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
வெளியூர் தொண்டர்கள்: வெளியூரில் இருந்து தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனால் க்ரீம்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, வாகன ஓட்டிகள் வேறுவழியாகத் திருப்பி விடப்பட்டனர்.
வதந்திகளை நம்ப வேண்டாம்: இந்த நிலையில், முதல்வர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும், அது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று அதிமுக நிர்வாகிகள் மறுத்தனர்.
இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியது:
முதல்வர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம். மருத்துவமனையில் முதல்வர் நலமுடன் உள்ளார். சிகிச்சை முடிந்து அவர் விரைவில் வீடு திரும்புவார். இதனால் தொண்டர்கள் யாரும் கவலை அடைய வேண்டாம் என்றார்.
வீடு திரும்புவார்: இந்நிலையில், முதல்வரின் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com