ஆமை வேகத்தில் அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள்

போடி- மதுரை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், தேனி மாவட்டம் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத ஒரே மாவட்டமாகத் திகழும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தேனியில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதர் மண்டிக் காணப்படும் ரயில் பாதை.
தேனியில் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதர் மண்டிக் காணப்படும் ரயில் பாதை.

போடி- மதுரை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், தேனி மாவட்டம் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத ஒரே மாவட்டமாகத் திகழும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1913-ஆம் ஆண்டு மதுரையில் இருந்து போடிக்கு 90 கி.மீ. தொலைவு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரயில் மூலம், தேனி மாவட்டம் மற்றும் கேரளத்தில் இருந்து ஏலக்காய், மிளகு, தேயிலை ஆகிய வாசனைப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்து ஏற்றுமதி செய்து வந்தனர்.

பயணிகள், சரக்குப் போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்த போடி- மதுரை மீட்டர் கேஜ் ரயில் பாதையை ரூ. 220 கோடியில் அகல ரயில் பாதையாக மாற்றப் போவதாக மத்திய அரசு அறிவித்து, கடந்த 2010, டிசம்பர் 31-ஆம் தேதி ரயில் போக்குவரத்தை நிறுத்தியது.

ரயில் பாதையில் இருந்த தண்டவாளம் அகற்றப்பட்டதோடு, செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வள்ளல்நதி ஆகிய ரயில் நிறுத்தங்களும் அகற்றப்பட்டன. தேனி ரயில் நிலையம் மட்டும் பயணிகள் முன்பதிவு மையமாகச் செயல்பட்டு வருகிறது.

போடி- மதுரை அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தற்போது வரை 2 தவணைகளில் மொத்தம் ரூ. 15 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. போதிய நிதியின்றி திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்பாúது இந்தப் பணிகளுக்கு ரூ. 350 கோடி செலவாகும் என்று ரயில்வே துறை மறுமதிப்பீடு செய்துள்ளது. அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்காததால் பணிகள் முழுமையடையாமல், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

கல்வி, மருத்துவம், சுற்றுலா, சரக்குப் போக்குவரத்து மற்றும் இதர வர்த்தகத் தொடர்புகளுக்கு பயன்படும் வகையில், மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைவில் முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இதுகுறித்து தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கச் செயலர் கே.எஸ்.கே. நடேசன் கூறியதாவது:

தேனி மாவட்டத்துக்கு மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், ஒடிசா, கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் சோளம், கம்பு உள்ளிட்ட நவதானியங்கள், பருப்பு வகைகள், பருத்தி, புளி உள்ளிட்ட சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன் எடையுள்ள பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதேபோல, தேனி மாவட்டத்தில் இருந்து ஏலக்காய், மிளகு, தேயிலை ஆகியவை தில்லி, கான்பூர் பகுதிகளுக்கும், வாழை, தேங்காய், திராட்சை, மா போன்ற தோட்டப் பயிர்கள் வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் அன்றாடம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தச் சரக்குப் போக்குவரத்து தற்போது லாரிகள் மூலம் மட்டுமே நடைபெற்று வருகிறது.

சரக்குகளை லாரிகளில் கொண்டு வர குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 300 செலவாகிறது. இதே சரக்குகளை ரயிலில் கொண்டு வந்தால் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 125 மட்டுமே செலவாகும். ரயில் போக்குவரத்து இல்லாததால் தேனி மாவட்டம் வர்த்தகம், வேளாண் விளைபொருள்கள் விற்பனையில் நலிவடைந்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com