சென்னையில் அக். 1ல் தொடங்குகிறது திருப்பதி திருக்குடை ஊர்வலம்

சென்னை பூக்கடை பகுதியில் அமைந்திருக்கும் சென்ன கேசவ பெருமாள் கோயிலில், அக்டோபர் 1ம் தேதி காலை 10.31 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிற
சென்னையில் அக். 1ல் தொடங்குகிறது திருப்பதி திருக்குடை ஊர்வலம்


சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் அமைந்திருக்கும் சென்ன கேசவ பெருமாள் கோயிலில், அக்டோபர் 1ம் தேதி காலை 10.31 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு இந்த திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் இரண்டு மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

இதுகுறித்து ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி கூறியிருப்பதாவது: திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் சென்றடைந்து இரவு தங்குதல்.

அக்டோபர் 2ம் தேதி ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குதல். 3ம் தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு தங்குதல். 4ம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு தங்குதல். 5ம் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து 6ம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம்வந்து வஸ்த்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெற குடும்பத்துடன் வாருங்கள்.

திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.

அதேபோல, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தனிநபர் வீடுகளுக்கோ, கடைகளுக்கோ வந்து தனிப்பட்ட பூஜையை ஏற்றுக்கொள்ளாது. திருப்பதி திருக்குடை தொடர்பாக எவரிடமும் எவ்வித கட்டணமும் தரவேண்டாம். நன்கொடைகள் வாங்கப்பட மாட்டாது. உண்டியல் வசூல் கிடையாது. திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோயில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பஜனை, பிரபந்தக் கோஷ்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிக் குழுக்கள் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவிக்கவும்.

திருப்பதி குடைகளை கவுரவிக்கும் வகையில், கோயில்களிடமிருந்து குடைகள் மற்றும் சாமரங்கள் போன்றவற்றை அனுப்பி வைப்பவர்கள் தங்கள் பொறுப்பிலேயே ஊர்வலத்தோடு கலந்து கொண்டு தாக்கர் சத்திரம் வரை வந்து திரும்பிவிடலாம். இது குறித்த சந்தேகங்களுக்கு 044 - 6515 8708, 73730 99562 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com