இளங்கோவனால் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவனால் நீக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் மீண்டும் அதே பதவியில் நீடிப்பர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இளங்கோவனால் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவனால் நீக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் மீண்டும் அதே பதவியில் நீடிப்பர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சில மாவட்டத் தலைவர்கள் நீக்கப்பட்டு (இளங்கோவன் நடவடிக்கையால்), புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தில்லி தலைமை ஏற்கவில்லை.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரின் அறிவுரைபடி, நீக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் மீண்டும் அந்தந்த மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டிருந்தவர்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் தெற்கு, திருப்பூர் புறநகர், நாகப்பட்டினம் வடக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி நகரம், கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டத் தலைவர்கள் மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்படுகின்றனர்.
ராயபுரம் மனோ மீண்டும் நியமனம்: ஏற்கெனவே தனது பதவியை ராஜிநாமா செய்த ராயபுரம் மனோ, மீண்டும் வடசென்னை மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இதேபோன்று, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் எம்எல்ஏ விஷ்ணுபிரசாத்துக்கு, அவர் வகித்த பதவிகள் மீண்டும் வழங்கப்படும். மேலும், மதுரை மாநகர மாவட்டப் பொறுப்பாளராக கார்த்திகேயனும், கிருஷ்ணகிரி மாவட்ட புதிய பொறுப்பாளராக ஜேசு துரைராஜாவும் நியமிக்கப்படுகின்றனர்.
61 மாவட்டங்களுக்கும் குழு: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுவைப் பெறுவதற்கு 61 மாவட்டங்களுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மனுக்களைப் பெறுவதோடு, அந்தந்த மாவட்ட திமுக பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். பிற கட்சிகளுக்கு உரிய அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுவும் பெறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். காங்கிரஸ் -திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது.
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது கண்டிக்கத்தக்கது. இது மோசமான கலாசாரம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். அப்போது, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விஸ்வநாதன், வள்ளல்பெருமான், காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com