என் குடும்ப வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்: திருச்சி சிவா மீது மகன் பகீர் குற்றச்சாட்டு

என் குடும்ப வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மீது, அவரது மகன் மணிவண்ணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.
என் குடும்ப வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்: திருச்சி சிவா மீது மகன் பகீர் குற்றச்சாட்டு

திருச்சி: என் குடும்ப வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மீது, அவரது மகன் மணிவண்ணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

திருச்சியில் நேற்று தனது மனைவி ஜோகி பிரதியுஷா மற்றும் மாமியார் டாக்டர் பிரேமாகுமாரி மார்ஷலுடன் செய்தியாளர்களை சந்தித்தார் சூர்யா சிவா.

அப்போது, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், எங்களை என் தந்தை திருச்சி சிவா பிரிக்கப் பார்ப்பதாகவும், மனைவிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இது குறித்து மணிவண்ணன் கூறுகையில், கடந்த 2013ம் ஆண்டு பிரதியுஷாவை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை என் தந்தை திருச்சி சிவா ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

என் குடும்பத்தில் அனைவருமே என் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள். என் தந்தையைத் தவிர. அவர் பெயரில் எனது மனைவிக்கும், மனைவியின் குடும்பத்துக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது என்றார்.

திருச்சியில், தனிக் குடித்தனம் நடத்தி வரும் மணிவண்ணன், நான் பிரதியுஷாவை விட்டுவிட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த வேறொருப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் தந்தை வலியுறுத்தி வருகிறார் என்று கூறினார்.

என் தந்தையின் அரசியல் வாழ்க்கைக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. கர்பமாக இருக்கும் என் மனைவிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே நான் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளேன் என்றார்.

திமுக கட்சித் தலைமையிடம் புகார் அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு, இது குடும்பப் பிரச்னை என்பதால், கட்சித் தலைமையிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என்று பதிலளித்தார். மேலும், எனது விருப்பம் என்னவென்றால், என் தந்தை எங்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டு, என் மனைவிக்கும், அவரது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுப்பதை நிறுத்த வேண்டும், அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான். என் மனைவி கர்பமாக இருப்பதால் தற்போது கொலை மிரட்டல் அதிகரித்தது. அதனால்தான் செய்தியாளர்களை சந்திக்க முடிவு செய்தேன் என்று மணிவண்ணன் கூறினார்.

இது குறித்து ஜோகி பிரதியுஷா கூறுகையில், கணவரை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விடுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் என் வீட்டுக்கு வந்து என்னை மிரட்டுகின்றனர். நிறைமாத கர்பிணியாக இருக்கும் எனக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றார்.

என் இரண்டு சகோதரிகளும் கூட காதல் திருமணம் செய்தவர்கள்தான். அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட என் தந்தையால், ஆண் வாரிசு என்பதால் என் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது ஜாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றார் மணிவண்ணன்.

திராவிட கட்சியின் முக்கியத் தலைவராக இருக்கும் திருச்சி சிவா, ஜாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக் கொள்வார் என்று நம்பினேன். ஆனால், ஒரு நாடாளுமன்ற எம்பியாக இருக்கும் நபரின் பொது வாழ்விலும், சொந்த வாழ்விலும் ஒரே விதமான கொள்கைகள் இருக்காது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டோம் என்று கூறுகிறார் மணிவண்ணனின் மாமியார் டாக்டர் பிரேமாகுமாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com