தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி: பரபரப்பான தீர்ப்புகளும் பெருமைக்குரிய பணிகளும்!

15 ஆண்டுகால நீதிபதியாக பணியாற்றி பல முக்கியத்துவம் வாய்ந்த் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி: பரபரப்பான தீர்ப்புகளும் பெருமைக்குரிய பணிகளும்!

சென்னை:  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இவர் சட்டத்துறையில் தனக்கிருக்கும் 32 ஆண்டுகள் பணி அனுபவத்தோடு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 15 ஆண்டுகால நீதிபதியாக பணியாற்றி பல முக்கியத்துவம் வாய்ந்த் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கௌல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்று கொண்டார். அதன் பின்னர் அவர் தலைமையிலான முதல் அமர்வு வழக்குகளை விசாரித்து வந்தது.

இந்த நிலையில், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பித்துள்ளார்.
கடந்த 1957 -ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 -ஆம் தேதி பிறந்த இவர், கடந்த 1985 -ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கடந்த 2002 பிப்ரவரி 5 -ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2016, ஆகஸ்ட் 8 ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 25ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, இரண்டாவது பெண் நீதிபதி ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1992 -ஆம் ஆண்டு முதல் பெண் தலைமை நீதிபதியாக கந்தகுமாரி பட்நாகர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் பேசிய இந்திரா பானர்ஜி, தில்லி உயர் நீதிமன்றத்தில் நான் பணியாற்றிய காலம் குறைவு. ஆனால் மிக இனிய அனுபவமாக இருந்தது என்றும், தில்லி உயர் நீதிமன்றத்தின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் என்னால் முடிந்த அளவுக்கு பணியாற்றியுள்ளேன் என்றார்.

பேச்சின் நிறைவாக, வழக்குரைஞர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான், நீதிமன்றங்களில் சிறப்பான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்திரா பானர்ஜி அளித்த முக்கியத் தீர்ப்புகளின் விவரம்

* ஜக்மோகன் டால்மியாவுக்கு எதிரான உத்தரவுக்குத் தடை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ஜக்மோகன் டால்மியாவை நீக்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றம், கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட அனைத்திற்கும் நடைபெறும் தேர்தல்களில் டால்மியா போட்டியிடலாம் என்று அனுமதி அளித்துள்ளது! பிசிசிஐயில் இருந்து ஜன்மோகன் டால்மியா நீக்கப்பட்டதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவினை இந்திரா பானர்ஜி பிறப்பித்தார்.

மேலும், கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஜக்மோகன் டால்மியாவை நீக்கியதற்கான விதிமுறைகள் இன்னமும் பதிவு செய்யப்படாததால் அவரது நீக்கத்திற்கு தடை விதிப்பதாக நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். 

10 ஆண்டுகளுக்கு முன்பு, 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

•    2013ம் ஆண்டு பொருட்களுக்கான சாலை நுழைவு வரிச் சட்டம் மீதான தீர்ப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட  'பொருட்களுக்கான சாலை நுழைவு வரிச் சட்டம் 2012'க்கு எதிராக இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கியதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த வழக்கில் மாநில அரசு கொண்ட வந்த சட்டத்துக்கு தடை விதித்து தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, மேற்கு வங்க மாநில அரசு கொண்டு வந்திருக்கும் இந்த  சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com