ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து: யாருடைய திட்டம் வெற்றி பெற்றது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து: யாருடைய திட்டம் வெற்றி பெற்றது?


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று இரவு அறிவித்தது.

இதையடுத்து சுமார் 1 மாத காலமாக ஆர்.கே.நகர் தொகுதியில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

வாக்காளர்களுக்கு ஒரு அரசியல்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்தது.

அரசியல் வட்டாரத்தில் ஆர்.கே.நகர். இடைத் தேர்தல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில், வெற்றி பெறப் போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் வெளியாகின.

பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்த அரசியல் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக எந்த கருத்துக் கணிப்பும் சொல்லவில்லை. மேலும், அவரது வெற்றிக்காக தமிழக அரசின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் இரவு பகலாக உழைத்தாலும், தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவும் சில பல அடிப்படை வேளைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்கண்ட சதி பற்றியும் தேர்தல் முடிவுகள் குறித்தும் அறிந்த முக்கிய வேட்பாளர், ஆர்.கே.நகர் தொகுதியில் பகிரங்கமாகவே பணப்பட்டுவாடாவை நடத்தியதாகவும் இதனால், தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்திவிடும் என்று கணக்குப் போட்டதாகவும் கூறப்பட்டது.

அதன்படிதான் தற்போது தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதில் முக்கிய வேட்பாளரின் திட்டம் நிறைவேறியதாக எடுத்துக் கொள்வதா?

அல்லது,

முக்கியக் கட்சி வேட்பாளர், அரசின் முக்கியப் பதவிகளில் இருக்கும் நபர்களை, தொகுதிக்காக செலவிடச் சொன்ன தொகைக் குறித்த பட்டியல், வருமான வரித்துறையினரிடம் சிக்கும் வகையில் இருந்ததற்கு பின்னணியில் அந்த கட்சியினரே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பட்டியல் எளிதாகக் கிடைக்கும் வகையில் வைக்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு இப்படியும் பதில் கிடைக்கிறது.

வழக்கமான தேர்தலைப் போல அல்லாமல், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் எத்தனையோ பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் பண நடமாட்டத்தையோ, பரிசுபொருள் விநியோகத்தையோ தடுக்க முடியாமல் போய்விட்டது. பணநடமாட்டத்துக்குக் காரணமானவர்களும், பணத்தை வாங்கிய பொதுமக்களும் கூட தேர்தல் ஆணையத்தைக் குற்றம்சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் திட்டம் மட்டுமே நிறைவேறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com