ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: தொகுதி மக்கள் சொல்வது என்னன்னா..

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: தொகுதி மக்கள் சொல்வது என்னன்னா..

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் அறிவித்தது.

இதற்கு அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை கூறி வருகின்றனர். தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களும், கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்றுள்ளனர்.

ஆனால், தொகுதி மக்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தமிழ் தொலைக்காட்சி ஒன்று நேரடியாக கேட்டறிந்தது.

அதன் மூலம், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அங்கு நடந்த பல்வேறு விஷங்கள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதே என்று தொகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பணப்பட்டுவாடா நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், அதைத் தடுக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இன்று தேர்தலை ரத்து செய்திருப்பது சரியான முறையல்ல என்று பெண் ஒருவர் கூறியுள்ளார்.

அதே போல, எங்கள் வரிப்பணம் தான் வீணாகுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. பணப்பட்டுவாடா நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவ்வாறு செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதை விடுத்து ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்வது சரியல்ல என்று அப்பகுதியைச் சேர்ந்த நபர் கூறினார்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல், பல்வேறு அரசியல் கட்சிகளும் இங்கே முகாமிட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று நடக்கும் முன்பே தடுக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து என்கிறார் மற்றொருவர்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குழந்தை போல இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் பூச்சாண்டிகளைப் போல மிட்டாய்களை கையில் வைத்துக் கொண்டு எங்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். எங்கெங்கு இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினரும் இங்கு வந்து பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டார்கள் என்று மனம் குமுறினார் ஒரு ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்.

தேர்தலை ரத்து செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் என்ன நடக்கும், தேர்தல் அறிவிப்பார்கள், முறைகேடுகள் நடக்கும், தடுக்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது. எனவே, இதனை மாற்றவே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தேர்தலை ரத்து செய்வது மட்டும் சரியான தீர்வாக இருக்காது என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com