ஒரே வாரத்தில் மூன்றாவது முறை: நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜர்!

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் மூன்றாவது முறையாக நடிகர் சரத்குமார் இன்று நேரில் ஆஜரானார்.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறை: நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜர்!

சென்னை:  நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் மூன்றாவது முறையாக நடிகர் சரத்குமார் இன்று நேரில் ஆஜரானார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோர் வீடுகள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சரத்குமாரிடம் கடந்த 8-ஆம் தேதியன்று காலை  11.20 தொடங்கி மாலை 07.30 மணி வரை விசாரனை நடத்தினர்.

இந்த நிலையில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் திடீர் சோதனை நடத்தினர். விசாரணையின்போது சரத்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், இச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மாலை 3 மணிக்கு கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

அங்கிருந்த சரத்குமாரிடம் சுமார் ஒரு மணி நேரம் அந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் சரத்குமார் தனது காரில் தேனாம்பேட்டையில் உள்ள ராடன் நிறுவன அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய காரில் வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்தனர்.

ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகளும், சில ஆவணங்களும் சரத்குமார் பெயரிலும், ராதிகா பெயரிலும் இருந்ததால், அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ராடன் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை வருமான அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. இந்தச் சோதனையின்போது சரத்குமாருடன் அவரது ஆடிட்டர், வழக்குரைஞர்கள் ஆகியோர் இருந்தனர்.

சோதனையின் முடிவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ராதிகாவுக்கு, மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சரத்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரும் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரரானார்கள்.அப்பொழுது ராடான் நிறுவனத்தில் சுமார் ரூ 4.97 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்ததாக இருவரும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் மூன்றாவது தடவையாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நடிகர் சரத்குமார் இன்று நேரில் ஆஜரானார். வரி ஏய்ப்பு குறித்து அவரிடம் மேலும் சில விளக்கங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com