அரசியல் கட்சிகள் நிரூபிக்க தேர்தல் ஆணையம் சவால்! வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவிப்போர், அதில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்கத் தயாரா?
அரசியல் கட்சிகள் நிரூபிக்க தேர்தல் ஆணையம் சவால்! வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவிப்போர், அதில் முறைகேடு செய்ய முடியும் என நிரூபிக்கத் தயாரா? என்று கேட்டு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெறுவதாக குற்றம்சாட்டி, வாக்குச்சீட்டு அடிப்படையிலான தேர்தல் முறைக்கு திரும்ப வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:
நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுக்கிறது.
வரும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து, ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளிக்கிறது. இந்த காலகட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியும் என்று யார் வேண்டுமானாலும் நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும் இதேபோன்ற சவாலை தேர்தல் ஆணையம் விடுத்திருந்தது. அந்நேரத்தில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து, தில்லி விக்யான் பவனுக்கு 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேட்டுக்கு வழியுள்ளது என்பதை யாரும் நிரூபிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதுபோல், இந்த முறை, சவாலுக்கு பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தேர்தல் ஆணையம் கொண்டு வர அதிக சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
சவாலை எதிர்கொள்ள வேண்டிய சரியான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. மே மாதம் முதல் வாரம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. எனவே, தேதி குறித்த அறிவிப்பு பிறகு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி வலியுறுத்தல்: இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்வது தொடர்பான சவாலை அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆஷிஷ் கேதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சவால் தொடர்பாக தேர்தல் ஆணையம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதா அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதா? தில்லி மாநகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளனவா? இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்றார்.
முன்னதாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த திங்கள்கிழமை பேசியபோது, தங்கள் கட்சியிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அளிக்கும்பட்சத்தில், அதில் 72 மணி நேரத்துக்குள் ஊடுருவி, ரகசிய எண்ணை மாற்றிக் காட்டுவோம் என்று தெரிவித்திருந்தார்.
இதேபோல், காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவித்தன. தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகளும் சந்தித்து நேரில் புகார் அளித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com