மீண்டும் இணைய வாருங்கள்: ஓ.பி.எஸ். அணியினருக்கு தினகரன் அழைப்பு

தாய்க் கழகத்தில் அனைவரும் இணைய வேண்டுமென அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்தார்.
மீண்டும் இணைய வாருங்கள்: ஓ.பி.எஸ். அணியினருக்கு தினகரன் அழைப்பு

தாய்க் கழகத்தில் அனைவரும் இணைய வேண்டுமென அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்தார்.

அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலையணிவித்து மரியாதை செலுத்தி நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுவிட்டு மீண்டும் சேருபவர்களை தாயன்போடு வரவேற்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது எந்த வழக்கும் தொடரப்போவதில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் காலதாமதம் ஏதுமில்லை. ஆவணங்களைச் சமர்ப்பிக்கவே அவகாசம் கோரப்பட்டுள்ளது என்றார்.

இணைப்பு முயற்சி தீவிரமா?: கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதிமுகவில் இருந்து தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ள அவர், சசிகலா அணிக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஓ.பி.எஸ். தலைமையில் செயல்பட்டு வரும் தனி அணி, இப்போது அதிமுக (அம்மா) அணியுடன் இணைவதற்காக ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தில் இருந்தே முன்முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். கட்சியின் சின்னம் உள்ளிட்டவற்றை திரும்பப் பெற முடியும் எனவும் இருதரப்புக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சசிகலாவுடன் ஆலோசனை?: இரு அணிகளும் இணைவது தொடர்பாக, அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதற்காகக் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் பெங்களூரு சென்று ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஓ.பி.எஸ். அணியில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையும் ஏற்றுக் கொண்டு கட்சியை ஒன்றாக்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என அதிமுக (அம்மா) அணியிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கருத்துகளை ஒட்டியே அனைவரும் தாய்க் கழகத்துக்குத் திரும்ப வேண்டுமென டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com