விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க முடிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடைபெற்ற திமுக தலைமையிலான அனைத்து கட்சிகள் கூட்டத்தில், வரும் 25-ம் தேதி
விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க முடிவு

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடைபெற்ற திமுக தலைமையிலான அனைத்து கட்சிகள் கூட்டத்தில், வரும் 25-ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தவும், அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- முதல் தீர்மானமாக தற்கொலை செய்து கொண்ட 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் கோரிக்கையான விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- உச்சநீதிமன்றம் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி விவசாயிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
- மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.
- நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
- கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
- முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்த வேண்டும்.
- விவசாயிகள் பிரச்சினை பற்றி ஆலோசிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.
- மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனே அரசு மேற்கொள்ள வேண்டும்.
- தமிழகத்தில் முழு மது விலக்கை கொண்டு வரவேண்டும்.
- தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
- தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- முக்கிய தீர்மானமாக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானங்களை மக்களிடம் விளக்கும் வகையிலும் வருகிற 22-ஆம் தேதி சென்னையில் அனைத்து கட்சி பொதுக் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுவார்கள்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வேண்டுகிறோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com