அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட்டேன்

அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட்டதாகவும், கட்சி பலவீனமடைய காரணமாக இருக்கமாட்டேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன். உடன், முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் உள்ளிட்ட ஆதரவாளர்கள்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன். உடன், முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் உள்ளிட்ட ஆதரவாளர்கள்.

அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட்டதாகவும், கட்சி பலவீனமடைய காரணமாக இருக்கமாட்டேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பால் அதிமுகவுக்கும், அரசுக்கும் கடந்த சில நாள்களாக இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
கட்சியிலும், ஆட்சியிலும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டிடிவி தினகரன் எத்தகைய முடிவினை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில், தனது இல்லத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அதன் விவரம்:
சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார்கள். அவர்களை போன்று நானும் உணர்ச்சி வசப்பட்டு பேச விரும்பவில்லை. அதிமுக எனும் கட்சி தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த இயக்கம்.
பலவீனப்படுத்தமாட்டேன்: ஏதோ பயத்தின் காரணமாக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளைக் கூட்டி அவசர கதியில் முடிவு எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது.
என்னைப் பொருத்தவரை கட்சியையும், ஆட்சியையும் பலவீனப்படுத்த நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு பயம் என்கிறீர்களே, என்ன பயம் என்று தினகரனிடம் கேட்டபோது, 'எனக்குத் தெரியவில்லை. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் என்னிடம் தொலைபேசியில் பேசினர். ஆனால், அவர்களுக்கு திடீரென பயம் வந்தது ஏனென்று தெரியவில்லை; பின்னணி என்ன என்பதும் தெரியாது' என்றார்.
வருமான வரி சோதனை நடந்ததால் பயமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'அது பற்றி தெரியாது. நான் தஞ்சாவூர் சென்றிருந்தேன்; பின்னர் பெங்களூரு சென்றேன். அப்போது கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். விலகுவது குறித்து என்னிடம் சொல்லி இருந்தால், நானே அறிவித்திருப்பேனே!' என தினகரன் பதிலளித்தார்.
சண்டை போடும் எண்ணம் இல்லை: நீங்கள் ஒதுங்கி விட்டீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'செவ்வாய்க்கிழமையே ஒதுங்கிவிட்டேன். கட்சிக்கு துரோகம் செய்யவோ சண்டை போடும் எண்ணமோ எனக்கு இல்லை' என்றார்.
உங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் உங்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு, 'அவர்கள் அவ்வப்போது வருவார்கள்; குறைகளைச் சொல்வார்கள். சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது வருவார்கள். எல்லோரும் நண்பர்கள்தான்; குறைகளைச் சொல்வார்கள்; தங்களது மனநிலையை வெளிப்படுத்துவர். யாரும் உணர்ச்சி வசப்பட்டு தவறான நடவடிக்கை எடுத்து கட்சியையும் ஆட்சியையும் அழித்துவிடக்கூடாது' என்று தினகரன் தெரிவித்தார்.
இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா என்று கேட்டபோது, 'எனக்குச் சரியாக தெரியாது. அரசியலில் நேரடியாக யார் இருக்கிறார்கள், மறைமுகமாக யார் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
திமுகவை பற்றிச் சொல்லலாம்; அவர்கள் செய்தால் அதில் அவர்களுக்கு பயன் இருக்கும். மற்ற கட்சிகள் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. நான் ஒன்றை சொல்லிவிட்டு நாளை அதனை வாபஸ் பெறமாட்டேன்' என்று அவர் தெரிவித்தார்.
சலசலப்பினால் ஆட்சிக்கு அபாயமா? என்ற கேள்விக்கு, 'இந்த சலசலப்பினால் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் ஆட்சியையும் கட்சியையும் வைத்து எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லை. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனவே, எந்த ஏமாற்றமும் இல்லை. அவசரப்பட்டு அதிருப்தி பயத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் கட்சி, ஆட்சிக்கு எதிராக அமைந்துவிடக்கூடாது' என தினகரன் பதிலளித்தார்.
உள்பயம் இருந்திருக்கலாம்: ஓ.பன்னீர்செல்வம் துரோகி என்று கூறியவர்கள் இன்று அவருடன் பேசுவோம் என்கிறார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'இதுபற்றி அவர்களிடம் கேளுங்கள். இந்த திடீர் மாற்றம் ஏன் வந்தது? பயமுறுத்தலா?
3 நாள்களில் அவர்களுக்கு அதிருப்தி வர வாய்ப்பில்லை. அவர்களுக்கு உள்பயம் இருந்திருக்கலாம்; இதனை சம்பந்தப்பட்டவர்களிடமே கேளுங்கள்.
அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் பயம் இல்லாமல் இருக்க வேண்டும். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள்; பயப்படாமல் தைரியமாக கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்' என்று தினகரன் தெரிவித்தார்.
முதல்வர் முடிவு எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வமும் பேசினால் சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சி நலன் கருதி முதல்வர் எடப்பாடி நல்ல முடிவு எடுக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவு கட்சி, ஆட்சியை பலப்படுத்தினால் தவறு இல்லை' என்று தினகரன் கூறினார்.
'நான் முதிர்ச்சி உள்ளவன்'
தான் ஒரு முதிர்ச்சியுள்ள நபர் என்று டிடிவி தினகரன், சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அதிமுகவில் நான் இருப்பதன் மூலம் நன்மை கிடைத்தால் சரி என்று நினைப்பவன். நான் முதிர்ச்சி உள்ளவன். இக்கட்டான சூழ்நிலையில் என்னை துணை பொதுச் செயலாளர் ஆக்கினர். இப்போது நான் இருப்பதால் பிரச்னை என்கிறார்கள்.
என்னை சட்டப்பேரவை உறுப்பினர்கள் எல்லாம் வந்து சந்தித்தார்கள். அவர்கள் குறைகளைச் சொன்னார்கள். தலைமைக் கழகத்துக்கு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகளை புதன்கிழமை பிற்பகல் வரச்சொல்லி இருந்தேன். (பின்னர் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.). இது எண்ணிக்கையையோ, பலத்தையோ காட்டுவதற்காக அல்ல.
என் மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என்ன வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் டிடிவி தினகரன்.

'ஆலோசனைக்குப் பிறகே முடிவு'
கட்சிப் பதவியை ராஜிநாமா செய்வது தொடர்பாக சசிகலாவுடன் ஆலோசித்து, அதன் பிறகே முடிவெடுப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரன், கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவரிடம், கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'எனக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாதான் வழங்கினார். எனவே, அவரிடம் கேட்டுத்தான் இதுதொடர்பாக முடிவெடுப்பேன்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com