ஆளுநர் மாளிகையில் விரைவில் ஒளவையார் சிலை

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஒளவையார் சிலை திறக்கப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள அரிய தாவரங்கள் குறித்து வடிவமைக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பை பார்வையிடும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
ஆளுநர் மாளிகையில் உள்ள அரிய தாவரங்கள் குறித்து வடிவமைக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பை பார்வையிடும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஒளவையார் சிலை திறக்கப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள ஆளுநர் மாளிகையை அனைத்து மக்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியதன் அடிப்படையில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அனைவருக்கும் பொதுவான இடம்: இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மும்பையில் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் முன்பதிவு செய்து ஆளுநர் மாளிகைக்கு மக்களோடு மக்களாக வந்து ஆர்வமுடன் பார்வையிட்டார்.
இதன் மூலம் எவ்வளவு பணம் இருந்தாலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்துக்கு உள்ள மரியாதையையும், அந்த மாளிகை அனைத்து வகையான மனிதர்களுக்கும் பொதுவான இடம் என்பதையும் உணரலாம். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
நிறை-குறைகளைத் தெரிவிக்கலாம்: இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்த்த பிறகு சுற்றுலாப் பயணிகள் தங்களது கருத்துகளை எழுத்து மூலம் தெரிவிக்கலாம். அப்போது சுற்றுலாவில் உள்ள நிறை, குறைகள், இன்னும் தேவைப்படும் முன்னேற்றங்கள் ஆகியவற்றைத் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் மேற்கொண்டு தேவையான அம்சங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும்.
ஆத்திசூடி ஒலிக்கும்: இந்த மாளிகை வளாகத்தில் ஒளவையாருக்கு சிலை அமைக்கப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒளவையாரின் கல்வெட்டில் உள்ள எழுத்துகளை தொட்டவுடன் ஆத்திசூடி வாசகங்கள் ஒலிக்கும்.
சிங்கப்பூர் உள்பட சிறிய நாடுகளில் சுற்றுலாத்துறை மிகப் பெரிய அளவுக்கு முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த நாடுகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது நாட்டின் சுற்றுலாத்துறை போதுமான அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை. இதில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்றார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள அபூர்வ தாவரங்கள், மரங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பை வித்யாசாகர் ராவ் வெளியிட்டார். அப்போது ஆளுநரின் முதன்மைச்செயலர் ரமேஷ் சந்த் மீனா, சுற்றுலாத் துறைச் செயலர் அபூர்வவர்மா, ஆணையர் பழனிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்
ஆளுநர் மாளிகையைப் பார்வையிட விரும்பும் பொதுமக்கள் www.tnrajbhavan.gov.in  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். பதிவுக் கட்டணம் ரூ.25 செலுத்த
வேண்டும்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். அசல் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆளுநர் மாளிகையில் பார்வையாளர்களைக் கவர்ந்த புள்ளிமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com