சிக்கலான சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த பெரிய மனிதர் சத்யராஜ்: கமல்ஹாசன் பாராட்டு

சிக்கலான சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த பெரிய மனிதர் சத்யராஜ்: கமல்ஹாசன் பாராட்டு

சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த பெரிய மனிதர் சத்யராஜ் என்றும் அவருக்கு தனது பாராட்டை தெரிவிப்பதாக பிரபல நடிகர் கமல்ஹாசன்

சென்னை: சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த பெரிய மனிதர் சத்யராஜ் என்றும் அவருக்கு தனது பாராட்டை தெரிவிப்பதாக பிரபல நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. பாகுபலி முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்துக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்போம் என்று அந்த அமைப்புகள் கெடு விதித்து உள்ளன. இதனால் பாகுபலி-2 படக்குழுவினர் தவிப்பில் இருஇருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதி நீர் பிரச்னையின்போது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ப் படங்கள் திரையிடுவதை நிறுத்தச் சொல்லி அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் லரும் ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

அப்படி பேசியபோது நான் கூறிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே 35 ஆண்டுகளாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய் மொழி கன்னடம்.

கடந்த 9 ஆண்டுகளில் பாகுபலி 1 உட்பட நான் நடித்த சுமார் 30 படங்கள் கர்நாடக மாநிலத்தில் வெளியாகியுள்ளன. எந்தப் பிரச்னையும் எழவில்லை. சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை.

9 ஆண்டுகளுக்கு முன்னால் நான் அந்தக் கண்டனக் கூட்டத்தில் பேசிய விடியோ பதிவை யூடியூபில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்கள் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும், அந்த வார்த்தைகளுக்காக 9 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னட மக்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழ் ஈழ உறவுகளும், தமிழக மக்களும், என் நலம் விரும்புபவர்களும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

பாகுபலி என்ற பெரிய திரைப்படத்தில் நடித்த மிகச் சிறிய தொழிலாளி நான். என் ஒருவரின் பேச்சு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பு விரயமாவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாது, கர்நாடகத்தில் பாகுபலி 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் அவர்களை பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை என் நலம் விரும்பிகள் தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும்.

என் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி 2 படத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்காக பொறுமை காத்து வந்த இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட படக் குழுவினருக்கு என் நன்றி.

இனிவரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்னை, காவிரி நதி நீர் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை என தமிழக மக்களின் நியாயமான பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

ஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதைவிட, ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் பெருமை, மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார் சத்யராஜ்.

இந்நிலையில், சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்க பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Congrats Mr. Sathyaraj for maintaining rationality in a troubled environement. Quoting VirumaaNdi மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன். Bravo

    — Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2017

பதிவில், சூழ்நிலையை உணர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜ்க்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். மன்னிப்புக் கேட்கிறவன் பெரியமனிதன் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com