பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்: தமிழருவி மணியன்

தமிழகத்தில் ஏப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரித்து,
பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்: தமிழருவி மணியன்

தஞ்சாவூர்: தமிழகத்தில் ஏப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரித்து, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றார் காந்தி மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.

தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

'மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்பதுதான் காந்தி மக்கள் இயக்கத்தின் இலக்கு. மதுவுக்கு எதிரான மக்கள் புரட்சி மெல்ல மெல்ல வளர்கிறது. இந்த மாற்றத்தை உருவாக்கியதில் காந்தி மக்கள் இயக்கம், பாமக, மதிமுக ஆகிய 3 அமைப்புகளுக்கும் பங்கு உண்டு.

இதேபோல, ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் இன்னும் லோக் ஆயுக்த அமைப்பு அமைக்கப்படவில்லை. இதை ஜூலை 15-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜூலை 15-ஆம் தேதி முதல் செப். 1-ஆம் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த முயல்வோம்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், அத்திட்டத்தை மத்திய அரசுக் கைவிட வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காந்தி மக்கள் இயக்கம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேறாமல் தடுக்கத் தொடர்புடைய கிராமங்களில் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். கிராம சபைக் கூட்ட முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஆணைப் பிறப்பிக்காது. எனவே, நெடுவாசல் மக்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

தமிழகத்தில் ஏப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரித்து, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்' என்றார் தமிழருவி மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com