மாணவர்களை சிந்தனையாளர்களாக நூலகர்கள் மாற்ற வேண்டும்: எழுத்தாளர் பிரபஞ்சன்

மாணவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக மாற்றும் பணியில் நூலகர்கள் ஈடுபட வேண்டும் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில் பேசுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவில் பேசுகிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

மாணவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக மாற்றும் பணியில் நூலகர்கள் ஈடுபட வேண்டும் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை மற்றும் பெரியார் பல்கலைக்கழக நூலக அறிவியல் துறை சார்பில் உலக புத்தகத் தின விழா பெரியார் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், சாகித்ய அகாதெமி அலுவலர் (பொறுப்பு) அ.சு.இளங்கோவன், "உன்னால் முடியும்' என்ற தலைப்பில் பேசியது:
குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் உடனடியாகத் தொடங்க வேண்டும். நாள்தோறும் இரவு நேரங்களில் சுமார் 2 மணி நேரம் கணினித் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் மூழ்குவதை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை விடுத்து அவர்கள் புத்தகங்கள் பக்கம் திரும்ப வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு, மாணவர்களை மதிப்பிடாமல், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, தனித் திறனைக் கண்டறிந்து உருவாக்க வேண்டும். பாடங்களைச் சரியாக புரிந்து கொள்ள முடியாது என பள்ளியில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், புத்தகங்களை தாயின் துணைக் கொண்டு புரிந்து கொண்டு படித்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார் என்றார்.
இதனையடுத்து, "வாசிக்கலாம் வாங்க' என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினார். அப்போது அவர் கூறியது:
எழுதப் படிக்கத் தெரியாத என்னுடைய தந்தை, எனக்கு கல்வியறிவு மேம்பட நான் 6-ஆம் வகுப்புப் பயின்ற போது, நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்தார். அந்த நூலகத்தின் நூலகர் தெய்வசிகாமணி கொடுத்த ஊக்கத்தால், அங்கிருந்த அனைத்து மொழிபெயர்ப்பு நூல்களையும் படித்து முடித்தேன். இந்த அடிப்படையால், எழுத்துப் பணியில் 55 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், இன்னும் 10 ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் படித்த தகவல்களையெல்லாம், சமூகத்துக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். புத்தகங்கள் மீது தீராக் காதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும் புதிய புத்தகங்களை வாசிப்பதன் மூலம் புதிய மனிதர்களைச் சந்தித்த அனுபவம் கிடைக்கும். படித்து முடித்து பணியில் சேர்ந்தவுடன், தங்களுடைய வாசிப்பை ஆசிரியர்கள் நிறுத்தி விடுகிறார்கள். இளம் தலைமுறையை ஆசிரியர்களை நம்பி ஒப்படைக்கும்போது, அவர்கள் வாசிப்புத் திறனை எந்த காலத்திலும் கைவிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவரை உருவாக்குவது போல, அவர்களை சிந்தனையாளர்களாக நூலகர்கள் மாற்ற வேண்டும். எல்லா நூலகர்களும் ஆசிரியர்கள்தான். பண்டைய மரபுகளைக் காப்பாற்ற வேண்டுமெனில், அவற்றை தெரிந்துகொள்ள நூலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்றார்.
பேராசிரியர்கள் மோ.தமிழ்மாறன், பிரேமலதா, எம்.ஜெயப்பிரகாஷ், நூலகப் புரவலர் எம்.நாசர்கான், மாவட்ட மைய நூலகர் ஆர்.வசந்த மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com