மின் புத்தக வாசிப்பு அதிகரிப்பு: சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் இளங்கோவன்

மின் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என சென்னை சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன் தெரிவித்தார்.
சாகித்ய அகாதெமி சார்பில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புத்தக நாள் நிகழ்ச்சியில் பேசுகிறார் எழுத்தாளர் கு.கணேசன். உடன், (இடமிருந்து) பேராசிரியர் வேணுகோபாலசுவாமி, புலவர் இல.வின்சென்ட், சாகித
சாகித்ய அகாதெமி சார்பில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புத்தக நாள் நிகழ்ச்சியில் பேசுகிறார் எழுத்தாளர் கு.கணேசன். உடன், (இடமிருந்து) பேராசிரியர் வேணுகோபாலசுவாமி, புலவர் இல.வின்சென்ட், சாகித

மின் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என சென்னை சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன் தெரிவித்தார்.
சாகித்ய அகாதெமி சார்பில் உலகப் புத்தக நாள் நிகழ்ச்சி சேலம் தமிழ்ச் சங்க அண்ணா நூலக மாடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு, சென்னையில் உள்ள சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன் பேசியது:
ஷேக்ஸ்பியர் பிறந்த தினமும், இறந்த தினமும் ஒன்றாக வந்த தினம் உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகக் காப்புரிமை தினமும் இதில் அடங்கும். எழுத்தாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் நாளாக இதைக் கொண்டாடுகிறோம்.
உலகம் முழுவதும் 13 கோடி புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. ஓராண்டுக்கு சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் சாகித்ய அகாதெமி 1954-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இலக்கிய வாய்ப்புகளை மேம்படுத்தி வருவதில் சாகித்ய அகாதெமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
இன்றைய தலைமுறையினர் இடையே புத்தக வாசிப்பு குறைந்தாகக் கூறுகின்றனர். ஆனால், புத்தக வாசிப்பு அதிகமாகி இருக்கிறது என்றே கூறலாம்.
மின் புத்தகம் மூலம் வாசிப்பு அதிகமாகி இருக்கிறது. ஓலைச்சுவடியில் இருந்து காகிதம், அதைத் தொடர்ந்து கணினி, செல்லிடப்பேசி என தொழில்நுட்பம் வளர்ந்து மின் புத்தக வாசிப்பும் அதிகரித்துள்ளது. தமிழில் வெளியாகும் நூல்களை கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டுவாழ் வாழ் தமிழர்கள் மின் புத்தகங்கள் மூலம் வாசிக்கின்றனர். எனவே, மின் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது எனலாம். நூல்கள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. பள்ளி செல்லாமலேயே புத்தக வாசிப்பு மூலம் எடிசன், மைக்கேல் ஃபாரடே ஆகிய அறிஞர்கள் உருவாகி இருக்கின்றனர்.
அதேபோல, தமிழகத்தில் ஜெயகாந்தன், விந்தன், ம.பொ.சி. ஆகியோர் அச்சுக்கூடத்தில் அச்சுக் கோர்ப்பாளராக இருந்து புத்தகத் துறைக்கு வந்து எழுத்து உலகில் சாதனை படைத்தவர்கள். இதில் ஞானபீட விருது, சாகித்ய அகாதெமி, தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். பள்ளிப் பாட நூல்களைப் படித்தால் முழு அறிவைப் பெற முடியாது. முன்பெல்லாம் துணைப் பாட நூல்கள் இருந்தன. திருக்குறள், பாரதி, பாரதிதாசன், மு.வ. புத்தகம் மூலம் நல்ல தமிழ் எழுதவும், மிகச் சிறந்த தமிழ் அறிஞராக மாறவும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் நூலகத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள நூலகங்களில் உள்ள ஒவ்வொரு பிரதியும் கன்னிமாரா நூலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கன்னிமாரா நூலகத்தில் சிறந்த புத்தகங்களை படித்து உயர்ந்தவர்தான் முன்னாள் முதல்வர் அண்ணா என்றார்.
எழுத்தாளர் கு.கணேசன் பேசுகையில், அறிவின் ஆயுதம் நூல்கள். மனிதன் இருளில் இருந்து விடுபடுவதற்கு சூரிய வெளிச்சமே புத்தகம்தான். ஆன்மாவின் உயிர்ப்பு நூல்கள். உலகையே புரட்டிப் போட்ட நூல்களுக்குக் காரணமானவர்கள் காரல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் ஆவர். நூல்கள்தான் மனிதனை மனிதனாக வாழ உதவுகின்றன என்றார்.
சாகித்ய அகாதெமி வாழ்க்கை வரலாறு நூல்கள், தொகுப்பு நூல்கள் குறித்து எழுத்தாளர் முனைவர் கு.கணேசன், மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி புலவர் இல.வின்சென்ட், வாழ்க்கைக்குப் புத்தகத்தின் பங்கு குறித்து எம்.ஜி.ராஜன், இரா.வேணுகோபாலசுவாமி உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com