டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது: ராமதாஸ்

டாஸ்மாக் கடைகளுக்காக சாலைகள் வகைமாற்றம் செய்ய முயலவில்லை என்று தமிழக அரசு கூறினாலும் கூட அதன் உண்மை முகம் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகிவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது: ராமதாஸ்


சென்னை: டாஸ்மாக் கடைகளுக்காக சாலைகள் வகைமாற்றம் செய்ய முயலவில்லை என்று தமிழக அரசு கூறினாலும் கூட அதன் உண்மை முகம் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகிவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்து மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.  தமிழகத்தைச் சீரழிக்கும் மது வணிகத்திற்கு எதிராக  பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு  வரும் தொடர் போராட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் கிடைத்த இரண்டாவது பெரிய வெற்றி இதுவாகும்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களையும், உயிரிழப்புகளையும்  தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளுக்கு எதிரான நீண்ட, நெடிய சட்டப்போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியது. உச்சநீதிமன்றம் வரை சென்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3321 மதுக்கடைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மூடிய நிலையில், தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் எடப்பாடி அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கு வசதியாக தமிழ்நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளை  மாநகராட்சி/ நகராட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றி, அதை இன்றைக்குள் தமக்கு அனுப்பி வைக்கும்படி மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் கடந்த 21-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயல் என்பதால்  இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.

ஆனால், தமிழக அரசு அதன் முடிவில் உறுதியாக இருந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி இப்படி ஒரு தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றது. மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காக சாலைகள் வகைமாற்றம் செய்ய முயலவில்லை என்று தமிழக அரசு கூறினாலும் கூட அதன் உண்மை முகம் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகிவிட்டது. ‘‘சாலைகளை வகைமாற்றம் செய்வதன் நோக்கம் மதுக் கடைகளை திறப்பது இல்லை என்றால், வகைமாற்றம் செய்யப்பட்ட பிறகு அவற்றில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா?’’ என்று நீதிபதிகள் கேட்ட போது, அத்தகைய உத்தரவாதத்தை அளிக்க முடியாது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மறுத்து விட்டார். அதுமட்டுமின்றி, சாலைகள் வகைமாற்றம் செய்யப்பட்டால் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசு சாலைகளை வகைமாற்றம் செய்வதே மதுக்கடைகளை திறப்பதற்காகத் தான் என்பதை உயர்நீதிமன்றத்தில் அரசு மேற்கொண்ட இந்நிலைப்பாட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதைக்கூட அறியாமல், அந்த சாலைகளையும் வகை மாற்றம் செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, உயர்நீதிமன்றத்தில் தெரியாமல் தவறு செய்துவிட்டோம் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதில் தமிழக அரசு எந்த அளவுக்கு அவசரம் காட்டியிருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும்.

மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழக அரசு பலமுறை கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஆனாலும், தமிழக அரசு இன்று வரை திருந்தவில்லை. இப்போதும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்வதற்குத் தான் துடித்துக் கொண்டிருக்கிறது. மூடப்பட்ட மதுக்கடைகளை அதே இடத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் திறப்பதற்கு எதிராக மக்கள் தொடர்போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு தமிழக அரசு இப்போதாவது திருந்த வேண்டும். மக்களைக் கொல்லும் மதுவை முற்றிலுமாக ஒழிக்க முன்வர வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை நாள் முதல் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், நாளை மறுநாள்  பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படவிருந்த தொடர்முழக்கப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com