முழு அடைப்புப் போராட்டத்தால் புதுவையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகள் இயங்கவில்லை

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான அனைத்து கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான அனைத்து கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது, அனைத்து தரப்பு விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்த புதுச்சேரி அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்புடன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும். கரும்பு நிலுவைத் தொகையை புதுச்சேரி அரசு உடனே வழங்க வேண்டும். புதுச்சேரியை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றி செயல்படுத்த வேண்டும். காரைக்காலை காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்துவது, ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் திட்டங்களை முழுமையாக மத்திய அரசு கைவிட வேண்டும்.

காரைக்கால் பகுதியும் மத்திய அரசின் பட்டியலில் உள்ளது என்பதை அரசு காணத்தவறக்கூடாது. நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கும் புதுச்சேரி அரசின் சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை எந்தவித தடங்கலுமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடைகள் அடைப்பு
புதுச்சேரி முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, காந்தி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அதே போல் பெரியமார்க்கெட், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, வில்லியனூர், லாஸ்பேட்டை உழவர்சந்தை, பாகூர், மண்ணாடிப்பட்டு, அரியாங்குப்பம் பகுதிகளிலும் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகள் எதுவும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழக அரசு பஸ்கள் மட்டும் குறைந்தளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

முக்கிய சாலைகள், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவை வெறிச்சோடிக் கிடந்தன. சுற்றுலா தலங்களான கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், நோனாங்குப்பம் படகு குழாம், ஆரோவில் பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

நோயாளிகள் பாதிப்பு
தனியார் மற்றும் அரசு நகரப்பேரூந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்ல முடியமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் பாதிப்படைந்தனர்.

1000 போலீஸார் பாதுகாப்பு
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க புதுச்சேரி பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பந்த் போராட்டத்துக்கு ஆளும் கட்சியான காங்கிரஸும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் பல்வேறு வணிகர் சங்கங்கள், கூட்டமைப்பு சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com