தமிழகம் முழுவதும் கடையடைப்பு: ஸ்டாலின் உள்பட 61 ஆயிரம் பேர் கைது

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
திருவாரூரில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணி.
திருவாரூரில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணி.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம் காரணமாக 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன.
விவசாயிகளுக்கு ஆதரவாக...: விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்பட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியலில் ஈடுபட்ட...: சாலை மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், சு.திருநாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்பட தமிழகம் முழுவதும் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 8,000 பேர், விழுப்புரம்-கடலூர்-திருவண்ணாமலை மாவட்டங்களில் 5,695 பேர், திருச்சி மாவட்டத்தில் 12,236 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3,000 பேர், மதுரை-திண்டுக்கல்-தேனி-ராமநாதபுரம்-சிவகங்கை-விருதுநகர் மாவட்டங்களில் 9,657 பேர், கோவை மாவட்டத்தில் 2,179 பேர், நாமக்கல் மாவட்டத்தில் 1,488 பேர், திருநெல்வேலி மாவட்டத்ததில் 2,000 பேர், சேலம்-புறநகர்ப் பகுதிகளில் 800 பேர் என 61 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
கோவையில் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு: தமிழகம் முழுவதும் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை: தமிழகம் முழுவதும் ஹோட்டல்களும் மூடப்பட்டன. இதனால், உணவுக்காக ஹோட்டல்களைச் சாந்திருப்போர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
போக்குவரத்தில் பாதிப்பு இல்லை: எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் அரசு பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் பங்கேற்றனர். எனினும், ஆளும்கட்சி மற்றும் பிற கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கினர்.
பகல் காட்சி ரத்து: திரைத் துறையினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
புதுச்சேரியில் முழு அடைப்பு: விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
திருவாரூரில் மு.க.ஸ்டாலின் கைது: திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்பட 2,200 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சு.திருநாவுக்கரசர் கைது: சென்னை எழும்பூர் ஆதித்தனார் மேம்பாலம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஜி.ராமகிருஷ்ணன் கைது: சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
வேலூர், விழுப்புரத்தில்...: வேலூரில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திண்டுக்கலில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் தலைமையில் எதிர்க்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் 642 இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் 11 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்திலும், 237 இடங்களில் அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்திலும், 57 இடங்களில் சாலை மறியலும், 337 இடங்களில் முன் அனுமதியின்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com