தமிழகத்தின் 18 வட மாவட்டங்களில் கடும் வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 18 வட மாவட்டங்களில் கடும் வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, இப்பகுதிகளில் அவ்வப்போது மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.

தமிழகத்தில் புதன்கிழமை 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கோடை காலம் தொடங்கி, தீவிரமாகத் தொடங்கியுள்ளதால் இயல்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வடதமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: வரும் நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் 104 முதல் 108 டிகிரி வரை அதிகரிக்கும் என்றனர்.

இந்த நிலையில், பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும், கோடை வெயில் கொளுத்துவதால் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும், வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தொப்பி அணிந்தோ, குடை பிடித்தோ செல்லவும், கழுத்து மற்றும் கைகளில் ஈரமான துணியை போர்த்தியபடி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகப்படியான களைப்பை உணரும் பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், கால்நடைகளை நிழலான பகுதிகளில் கட்டி வைக்குமாறும் கூறியுள்ளனர்.

கோடை மழை: வெயில் வாட்டி எடுத்தாலும், வெப்பச்சலனத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, தருமபுரி, திண்டுக்கல், கோவை மாவட்டம் வால்பாறை, ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும் நாமக்கல், திருநெல்வேலி, கரூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

12 இடங்களில் சதம்: இந்நிலையில் தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

வேலூர், திருப்பத்தூர், திருத்தணி 107
திருச்சி 106
பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி 105
மதுரை 104
சேலம், பரங்கிப்பேட்டை 102
தருமபுரி 101
கோவை, சென்னை 100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com