உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு: வைகோ

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் தமிழக அரசு: வைகோ

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக புழல் சிறையில் இருந்தபடி அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மார்ச் 31 -ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் 3,321 டாஸ்மாக் மதுக்கடைகளும், ஆயிரக்கணக்கான தனியார் மதுபானக் குடிப்பகங்களும் மூடப்பட்டன. ஆனால், மீண்டும் அக்கடைகளை வேறு மாற்று இடங்களில் திறப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு எதிராக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்களுக்கு ஓர் ஆணை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், 'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி, நகராட்சிகள் வசம் எடுத்துக்கொள்ள உரிய மன்றத் தீர்மானத்தை இயற்ற வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் வருவாய் இழப்பை ஈடு கட்டுவதற்கு, நாட்டை நாசப்படுத்தும் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், மக்கள் மன்றத்தின் எதிர்ப்பையும் புறந்தள்ளும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com