கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னை: முதல்வர் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னையில் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், நாங்கள் பேசத் தயாராக உள்ளோம் என்றார் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும்,
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னை: முதல்வர் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னையில் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், நாங்கள் பேசத் தயாராக உள்ளோம் என்றார் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி.
கரூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ், கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 1.3.2016-ல் அடிக்கல்நாட்டப்பட்டது. பிறகு, கல்லூரி கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கும் நிலையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் இத்திட்டத்திற்கு தடங்கல் செய்து இடத்தை சணப்பிரட்டி காந்தி கிராமத்திற்கு மாற்ற முயன்றுள்ளனர்.
இதனால், முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட வாங்கல் குப்புச்சிபாளையத்திலேயே மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை அனுமதி கிடைக்காததால், அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளோம்.
வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை எங்களது போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.
சுகாதாரத் துறை அமைச்சர் வந்து ஆய்வுசெய்த பிறகுதான் இடம் சரியானது அல்ல எனக் கூறி, வாங்கல்குப்புச்சிபாளையம் தேர்வுசெய்யப்படவில்லை என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும்போது, அவர் வந்துபோனது எனக்கு தெரியாதா? இடத்தை மாற்றவேண்டும் என்பது அவர்களது இலக்கு.
முதல்வரிடம் 3 முறை மனு கொடுத்துள்ளேன். அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில்தான் இந்த போராட்டம். முதல்வர் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருப்பதால், முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். அவரது அலுவலகத்தில் இந்த பிரச்னை குறித்து பேசுவதாக இருந்தால் நான் தயார். வாங்கல்குப்புச்சிபாளையத்தில் மருத்துவக் கல்லூரி பணிகள் தொடங்கினால், உடனே வழக்கை வாபஸ் பெற நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் செந்தில் பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com