நீட் தேர்வு: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர உதவுங்கள்: பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வகை செய்திடும் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உதவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர்
நீட் தேர்வு: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர உதவுங்கள்: பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வகை செய்திடும் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற உதவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
நடப்பு கல்வியாண்டிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இப்போதைய நிலை தொடர வகை செய்திடும் சட்ட மசோதாக்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
கடிதம் அனுப்பியது: மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'தனிப்பட்ட மாநிலங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையில், தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) எந்த வகையிலும் தலையீடு செய்யாது' எனவும், 'பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரையில் கிராமப்புற, மலைப் பகுதிகள், பழங்குடியின மாணவர்களுக்கு மாநில அரசே முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்கலாம்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சில நிபந்தனைகளையும் மாநில அரசே விதிக்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், நீட் - முதுநிலை பட்ட மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் விளக்கக் கையேட்டில் சேர்க்கை நடைமுறை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில், 'சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசால் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகார அமைப்பால் அல்லது பல்கலைக்கழகங்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், 'நீட் தேர்வு மதிப்பெண்களுடன் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகள், இடஒதுக்கீடு கொள்கை, கிராமப்புறங்களில் பணிநியமனம் போன்ற அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட உறுதிகளின் அடிப்படையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான பட்டமேற்படிப்பு சேர்க்கை விளக்கக் கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில் 50 சதவீத மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த ஆண்டுகளைப் போன்றே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவோருக்கு முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்குவது, இப்போதிருக்கும் கொள்கையைப் பின்பற்றுவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, இந்திய மருத்துவக் கவுன்சிலின் மருத்துவ பட்டமேற்படிப்பு கல்வி முறைப்படுத்துதல் 2000 -இல் உள்ள அம்சங்களானது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்த உறுதிப்பாடுகளையும், நிலைப்பாட்டையும் ஈடுசெய்வதாக இல்லை.
மேலும், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் தமிழக அரசின் சேர்க்கைக் கொள்கையை பின்பற்ற முடியாதபடி தடுக்கப்படும் சூழல் ஏற்படும். இது கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பது என்ற நோக்கில் பின்விளைவை ஏற்படுத்தும்.
மேல் முறையீடு செய்ய முடிவு: எனவே, பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி முறைப்படுத்துதல் 2000-இல் அம்சங்கள் குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்திய உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், அரசு மருத்துவர்கள் சங்கமும் மேல்முறையீடு செய்யவுள்ளன.
பட்டமேற்படிப்பில் இப்போதைய நிலையே தொடர்வதை உறுதி செய்வதிடவும், இந்த விஷயத்தில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தவும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அளித்திட வேண்டும்.
இளநிலைப் படிப்பில் நீட் தேர்வு: தமிழகத்தில் மாநில பாட வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நகர்ப்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய பயிற்சி வகுப்புகள் மற்றும் அதுசார்ந்த புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அவர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com