இந்து முன்னணி தலைவர் படுகொலை வழக்கு: ஆறு பேருக்கு விதித்த ஆயுள் தண்டனை ரத்து

மதுரையைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவர் ராஜகோபால் 1994-ஆம் ஆண்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரை விடுதலை செய்ய வேண்டும்

மதுரையைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவர் ராஜகோபால் 1994-ஆம் ஆண்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்து முன்னணி தலைவர்களில் ஒருவரான ராஜகோபால், மதுரையில் கடந்த 1994, அக்டோபர் 10-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஷாகுல் ஹமீது, ராஜா ஹுசேன், ஜுபேர், ஜாகிர் ஹுசேன், அஜீஸ், சீனி நயினார் முகம்மது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஆறு பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், ரோஹின்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வியாழக்கிழமை அளித்த தீர்ப்பு வருமாறு:
ராஜகோபாலன் படுகொலை தொடர்பாக மாநில காவல் குற்றப்புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) நடத்திய விசாரணை, பின்னர் சிபிஐ விசாரணைக்கு 1996 ஜூலை மாதம் மாற்றப்பட்டது. இந்த வழக்கை சென்னை தடா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
தடா சட்டப் பிரிவுகளின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். அந்த அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபர் சீனி நயினார் முகம்மது, விசாரணை அதிகாரிகளிடம் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் அளித்துள்ள வாக்குமூலத்துக்கும் ஆறாவது நபர் அளித்துள்ள வாக்குமூலத்துக்கும் பல முரண்பாடுகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் உணருகிறது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி தனக்கு 'தமிழ்' மொழி தெரியாது என்றும் தமிழ் மொழியில் இடம் பெற்ற பெரும்பாலான வழக்கின் ஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் விவரத்தை முழுமையாகப் படித்துப் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் இடம் பெற்ற ஒரு சில பகுதிகளை மட்டும் படித்து விட்டு குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து வழக்காட ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் தடா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
தடா சட்டத்தின் மூலம் ஒருவரை பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி வழக்காடும் போது, அந்த நபர் பயங்கரவாதி என்பதை சாட்சியங்களுடன் புலனாய்வு அமைப்பு நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரி முன்னிலையில்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர் வாக்குமூலம் அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதியை இந்த வழக்கில் விசாரணை அதிகாரி பின்பற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கற்பகவிநாயகம் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை அடையாளம் காட்ட, அரசுத் தரப்பு முதலாவது சாட்சியை விசாரணை அதிகாரிகள் அழைக்கவில்லை. இதை தடா நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
இதுபோன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு ஆறு பேருக்கும் தடா நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடுகிறோம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com