கொடநாடு கொலை வழக்கில் மீண்டும் திருப்பம்: சாலை விபத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் பலி

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக தனிப் படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி நடத்தி

பாலக்காடு: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக தனிப் படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி நடத்தி வருகின்றனர். .

கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் (50) திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை நேரத்தில் கொடநாடு பகுதியில் சுற்றிவந்த சொகுசு வாகனங்கள் குறித்து கோத்தகிரி டானிங்டன், குஞ்சப்பனை சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையப் பணியாளர்களிடம் சொகுசு வாகனங்களின் படக்காட்சிகள் காண்பிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் காவல் துறையினரின் ஒத்துழைப்போடும் குற்றவாளிகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தன்று சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒரு காரை கூடலூர் அருகே போலீஸார் சோதனை செய்தனர். காரில் ஆவணங்கள் இல்லாததால் அந்த காரை பறிமுதல் செய்தனர்.

காரின் உரிமையாளர் கேரளாவில் இருந்து வந்து ஆவணங்களை காட்டிவிட்டு காரை எடுத்து சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காரும், கூடலூரில் பிடிபட்ட காரும் ஒரே மாதிரியாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த கேரளாவுக்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர்.

அப்போது திருச்சூரில் சம்பந்தப்பட்ட காரை போலீஸார் பிடித்தனர். மேலும் காரில் வந்த பாலக்காடு மாவட்டம் புதுக்கோடு பகுதியை சேர்ந்த சதீசன், பத்தினம்திட்டா மாவட்டம் தொடுகரா பகுதியை சேர்ந்த சிபு, திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரா பகுதியை சேர்ந்த சந்தோஷ், சைனன் மற்றும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 6 பேர் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு காவலாளி ஓம்பகதூர் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மலப்புரம் காவல்நிலையத்தில் அவர்கள் 6 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருந்தனர்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை சந்தேகப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ்(34). அவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். தென்னங்குடிபாளயைத்தில் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், கனகராஜ் காயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமுதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு நெருக்கமான நபர் என்ற தகவலின் பேரில், திருச்சூரை சேர்ந்த சையன் என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். குனியமுத்தூரில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த சையன் தற்போது தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், இன்று காரில் தப்பிச்சென்ற சையன் பாலக்காடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கினான். சையன் தப்பிச்சென்ற கார் மீது டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சையனுடன் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சையான், ஆபத்தானி நிலையில் பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com