கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதாக 4 பேருக்கு 15 நாள் காவல்

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான 4 பேரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். கைதான 4 பேரையும் 15

குன்னூர்: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான 4 பேரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். கைதான 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க குன்னூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் தேடப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்தார்.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற காவலாளி கொலை தொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்காக 7 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவத்தில் 11 பேருக்கு தொடர்புள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 இவர்களில் முதல் குற்றவாளி சேலத்தை சேர்ந்த கனகராஜ் ஆவார். இவர் ஏற்கனவே ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வெளியேற்றப்பட்டவர்.

இவர் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்து விட்ட நிலையில் 10 பேர் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர். இவர்களில் கோவையை சேர்ந்த சயனும் ஒருவர். இவரும் சனிக்கிழமை காலையில் பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இவர்கள் இருவரும் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளாவர். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பெரிய அளவில் பணம் இருப்பதாகவும், அதை கொள்ளையடிக்க இவர்கள் திட்டமி்ட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் 11 பேர் கொண்ட இக்கும்பல் கொடநாடு எஸ்டேட் 8-ஆம் எண் கேட்டிற்கு சென்று அங்கு பணியிலிருந்த காவலாளி கிருஷ்ண தாப்பாவை ஒரு லாரியில் கட்டி போட்டுள்ளனர். அதையடுத்து 10-ஆம் எண் கேட்டில் பணியிலிருந்த ஓம் பகதூரை தாக்கி அவரையும் மரத்தில் கட்டி போட்டுள்ளனர்.

இருவரது மொபைல் போன்களையும் வீசியுள்ளனர். அதையடுத்து பங்களாவிற்குள் புகுந்த இவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகிய இருவரது அறைக்கதவுகளை  உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால், அங்கு பணம் ஏதும் கிடைக்கவில்லை. அங்கிருந்த 5 கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு கிறிஸ்டல் பரிசு பொருளை மட்டு்ம் எடுத்து சென்றுள்ளனர்.

 இதைத்தொடர்ந்து 6 பேர் உதகைக்கு வந்து கூடலூர் வழியாக தப்பியுள்ளனர். கனகராஜ் மற்றும் சயன் ஆகியோர் கோவைக்கு காரிலும், மற்றவர்கள் பேருந்திலும் தப்பியுள்ளனர். இவர்களில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி(39). தீபு(32), சதீஷன்(42) மற்றும் உதயகுமார்(47) ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆத்தூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை காலையில் பாலக்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சயனும் படுகாயமடைந்துள்ளார். எனவே, மற்ற 5 பேரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு விபத்துகள் தொடர்பாக சேலம் மற்றும் பாலக்காடு மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பங்களாவிருந்து கடத்தி செல்லப்பட்ட 5 கைக்கடிகாரங்களும் கேரளத்திலுள்ள ஆற்றில் வீசப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. கிறிஸ்டல் சிலை மற்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்புா தெரிவித்தார்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான 4 பேரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். கைதான 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க குன்னூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மலப்புரம் அருகே மேலும் 2 பேரை கைது செய்துள்ள கேரள போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com