நீதிமன்றம், காவல்துறையை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சட்டப் பட்டதாரிகளும், வழக்குரைஞர்களும் நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ எந்தச் சூழலிலும் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற

சட்டப் பட்டதாரிகளும், வழக்குரைஞர்களும் நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ எந்தச் சூழலிலும் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பெ. வேல்முருகன் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டச் சான்றளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி நீதிபதி பெ. வேல்முருகன் பேசியது:
மக்களுக்கும், நீதிமன்றத்துக்கும், காவல் துறைக்கும் உறுதுணையாக இருந்து உரிமைகளை பெற்றுத் தரும் துறையாக விளங்குகிறது சட்டக் கல்வி. எனவே, சட்டம் கற்கும் மாணவர்கள் அனைவரும் சமூகத்துக்கு முன்மாதிரி குடிமகனாக விளங்க வேண்டும்.
அனைவருக்குமே அடிப்படை சட்டம் குறித்த விழிப்புணர்வு இருத்தல் வேண்டும். அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பெற விழிப்புணர்வு அவசியம். அந்த உரிமைகளை பெற்றுத் தருவது வழக்குரைஞர்களின் கடமை. நாணயத்துக்கு இரு பக்கங்களும் அவசியம் என்பதை போல, மனிதர்களுக்கு அவரவர் உரிமையும், கடமையும் அவசியம்.
சட்டம் பயின்றவர்கள் உடனடியாக வழக்காடு தொழிலுக்கு வந்துவிடக் கூடாது. 100 சதவீத அனுபவம் பெற்று, முழு ஈடுபாட்டுடன் வர வேண்டும். பரிகாரம் கோரும் நபர்களுக்கு எந்தச் சூழலிலும் வழக்குரைஞர்கள் ஏமாற்றத்தை அளிக்கக் கூடாது. துரோகம் செய்தல் கூடாது. அதற்காக, நீதிமன்றத்தையோ, காவல் துறையையோ தவறாக அணுகி பரிகாரம் பெற்றுத் தரக் கூடாது. எந்தச் சூழலிலும் நீதிபதியையோ, காவல்துறை அதிகாரியையோ தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றார்.
இந்த விழாவில், 7 பேர் எம்.எல். பட்டமும், 101 பேர் மூன்றாண்டுக்கான சட்டப் பட்டமும், 103 பேர் 5 ஆண்டுகளுக்கான சட்டப் பட்டமும் நேரில் பெற்றனர். ஒட்டுமொத்தமாக 456 மாணவர், மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், அரசு சட்டக் கல்வி இயக்குநர் ந.சு. சந்தோஷ்குமார், அரசு சட்டக் கல்லூரி முதல்வர்கள் ம. ராஜேஸ்வரன் (திருநெல்வேலி), எஸ். மனோகரன் (மதுரை), ஜே. வின்சென்ட் காமராஜ் (திருச்சி), அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர் என். எபினேசர் ஜோசப், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ந. ராமபிரான் ரஞ்சித்சிங், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி முன்னாள் முதல்வர் பி.எஸ். சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்முறையாக பட்டச் சான்று விழா
தமிழகத்தில் உள்ள 7 சட்டக் கல்லூரிகளில் இதுவரை சட்டம் பயின்று வந்த மாணவர், மாணவிகள் அவரவர் பயின்ற கல்லூரிகளில் பட்டம் பெற்றதில்லை. தபால் மூலமாகவோ, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலோ பெறும் நிலை இருந்து வந்தது. 2016ஆம் ஆண்டு முதல் அவரவர் சட்டம் பயிலும் கல்லூரிகளிலேயே பட்டச் சான்று பெறும் நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் பட்டச் சான்று வழங்கும் விழா சனிக்கிழமை (ஏப்.29) நடைபெற்றது. இக் கல்லூரி 5.10.1997இல் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போதுதான் பட்டச் சான்று வழங்கும் விழா நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com