கீழடி அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு

கீழடி அகழாய்வு நடத்துவது தொரடர்பான பொதுநல வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்டு 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்கிழமை உத்தரவு.
கீழடி அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு

மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கீழடி நகரம். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் மூலம், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்துள்ளது. 

இங்கிருந்து 5300 பழம்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கான சான்றுகளும் உள்ளன.

110 ஏக்கர் அளவில் இதற்கான சான்றுகள் புதைந்திருக்கும் நிலையில், சுமார் 1 ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. 

கீழடியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட தொல்லியல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கனிமொழி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், விதிப்படி அகழாய்வு நடத்த யார் பெயரில் உரிமம் பெறப்பட்டதோ அவரே அந்தப் பணியை தொடர முடியும். தற்போது அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் அந்த அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்தவர். எனவே கீழடி அகழாய்வு பணியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனே அதனை தொடர வேண்டும் என்றிருந்தது.

இந்நிலையில், இந்த பொதுநல மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடத்தப்பட்டது.

அப்போது, கீழடியில் அகழாய்வில் ஏன் சரியான நபரை நியமிக்கவில்லை என தமிழக அரசிடம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு, அதற்கு சரியான நபரைத்தான் நியமித்துள்ளதாக விளக்கமளித்தது.

இதையடுத்து, கனிமொழி என்பவர் தொடுத்த இந்த பொதுநல வழக்கை ஆகஸ்ட் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com