பரப்பன அக்ரஹாரா சிறையில் டிடிவி தினகரன்-சசிகலா சந்திப்பு

சசிகலாவை சந்திப்பதற்காக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புதன்கிழமை மாலை சென்றடைந்தார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் டிடிவி தினகரன்-சசிகலா சந்திப்பு

முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக-வின் அடுத்த பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவரை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜெயலலிதா மறைவில் சந்தேகம் உள்ளதாகக் கூறியும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீர் போர்க்கொடி தூக்கினார்.

பின்னர், அதிமுக பல அணிகளாகப் பிரியத் தொடங்கின. ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை ஆரம்பித்தார். இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.

டிடிவி தலைமையிலான அணி, அதிமுக அம்மா அணியாக செயல்படத் துவங்கியது. இவ்விரு அணிகளும் ஜெயலலிதா மறைவையடுத்து நடந்த ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனி வேட்பாளர்களுடன் களமிறங்கின. இருப்பினும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவங்களுக்கு இடையில் கூவத்தூர் விடுதி களேபரங்களும் அரங்கேறின. 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். 

மேலும், பிரிந்துள்ள அதிமுக ஒன்று சேர்வது தொடர்பாக இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தைக்குழு அமைத்தது. இதில் சமரசம் எட்டப்படாத காரணத்தால் ஓ.பன்னீர்செல்வம் அணியின் பேச்சுவார்த்தைகக்குழு கலைக்கப்பட்டது. சசிகலா குடும்பம் முற்றிலும் அதிமுக-வில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அதிமுக-வின் நலன் கருதி அக்கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஜாமினில் வெளிவந்த தினகரன், அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கு ஆகஸ்ட் 5-ந் தேதி வரை காலக்கெடு விதித்தார். அப்போது வரை இந்த இரு அணிகளும் இணையாத பட்சத்தில் தானே நேரடியாக தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.

இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுக இணைப்புக்கான கதவுகள் இன்னும் திறந்து இருப்பதாகவே கூறினார்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக டிடிவி தினகரன் தற்போது பெங்களூரு சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com