செயின் பறிப்பு கொள்ளையர்களின் கூடாரமாகிறதா சென்னை? 8 மணிநேரத்தில் 7 சம்பவங்கள்

சென்னையில், கடந்த திங்கள்கிழமையன்று 8 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது, பெண்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
செயின் பறிப்பு கொள்ளையர்களின் கூடாரமாகிறதா சென்னை? 8 மணிநேரத்தில் 7 சம்பவங்கள்


சென்னை: சென்னையில், கடந்த திங்கள்கிழமையன்று 8 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது, பெண்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசத்தைத் தடுக்க முடியாமல் சென்னை காவல்துறை திணறி வருகிறது.

திங்கள்கிழமை நடந்த செயின்பறிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியரின் மனைவியும் ஒருவர்.

மாலை 3 மணியளவில் டி.பி. சத்திரம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த சூரியபிரபா (36) என்ற பெண்ணின் 6.5 சவரன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

தொடர்ந்து அதே பகுதியில் 38 வயதான கோமதியின் செயினும் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்ணாநகரில் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்று கொண்டிருந்த சுதா (34)வின் 8.5 சவரன் நகை பறிக்கப்பட்டது. இந்த மூன்று சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதேப்போல வெப்பேரியிலும், மைலாப்பூரில் இரவு 10 மணியளவில் இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர் இருதயராஜின் மனைவி மரியா கவிதா (32) சாந்தோம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது 5.5 சவரன் தங்கச் செயினை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பறித்துச் சென்றனர்.

இதே நேரத்தில், முகப்பேரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரேவதியின் (30) 12 சவரன் தங்க செயினையும் கொள்ளையர்கள் பறித்துள்ளனர். வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த ரேவதியின் கழுத்தில் இருந்து செயினை பறித்ததால், கட்டுப்பாட்டை இழந்த ரேவதி சாலையில் விழுந்து காயமடைந்துள்ளார்.

தொடர்ந்து சென்னையில் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சாலையில் நடக்கவே பெண்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் செயின் பறிப்பு சம்பவம் நடக்காத சாலையே இல்லை எனும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வழக்குகள் பதிவாகின்றன. 

இதில், 8 மணி நேரத்தில் 7 செயின் பறிப்புகள் நிகழ்ந்துள்ளது. இன்னும் அதிகமான சம்பவங்கள் நேரிட்டிருக்கலாம். ஒரு சில செயின் பறிப்பு குறித்து புகார் பதிவு செய்யப்படாமலும் இருக்கலாம் என்கின்றனர் காவல்துறை தரப்பில்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com