சிவாஜி சிலை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டதில் சதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

சிவாஜி சிலை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டதில் சதி உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவாஜி சிலை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டதில் சதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

சிவாஜி சிலை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்டதில் சதி உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை கடற்கரை சாலையில் இராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டிய நடிகர் திலகத்திற்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அவரது நினைவுநாளான ஜூலை 21-ஆம் தேதி கடற்கரை சாலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போதே இச்சிலையால்  விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தமிழக அரசு சிவாஜி சிலையால் தான் அப்பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் தான் சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துக்கள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை  ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டு செய்த சதி என்பதில் ஐயமில்லை.

இப்போதும் கூட சிலையை அகற்ற வேண்டும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த சிலையை  சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரைச் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராசர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவ்வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என பகிரங்கமாக குற்றஞ்சாற்றுகிறேன்.

கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை இருந்ததால் விபத்துக்களோ, போக்குவரத்து பாதிப்புகளோ ஏற்பட்டதில்லை. சென்னை அண்ணா சாலையின் நடுவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சாலைகளின் நடுவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறிவரும் தமிழக அரசு, இந்த உண்மையை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வகை செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

இவ்வாறாக சிவாஜி சிலையை அகற்றுவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு விட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி & காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com