என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை: முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

என்.எல்.சி.யில் பணி மறுக்கப்பட்ட 3 தொழிற்சங்க நிர்வாகிகள் பிரச்னை தொடர்பாக, புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

என்.எல்.சி.யில் பணி மறுக்கப்பட்ட 3 தொழிற்சங்க நிர்வாகிகள் பிரச்னை தொடர்பாக, புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நாள்களை 26-லிருந்து 19 நாள்களாக குறைத்தது தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வாரம் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கெனவே வழங்கி வந்தபடி பணி நாள்கள் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்குச் சென்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அந்தோணி, பூவராகவன், சங்கர் ஆகிய 3 தொழிலாளர்களுக்கு பணி வழங்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்துத் தொழிற்சங்கங்களும், அந்த 3 தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று கூறி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியூ, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் என்.எல்.சி. நிர்வாகம், உதவித் தொழிலாளர் ஆணையர் கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் போது, பணி மறுக்கப்பட்ட 3 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க என்.எல்.சி. நிர்வாகத்துக்கு உதவித் தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தினார்.
மேலும், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினரை கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த 3 பேர் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தடையாணை பெற்றுள்ளோம். அவர்களை பணியில் சேர்க்க முடியாது என என்.எல்.சி. நிர்வாகம் கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து நெய்வேலியில் கூடி முடிவெடுக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com