ஒசூர் அருகே சிறுமிக்கு 12 வயதில் திருமணம், 14 வயதில் கைக்குழந்தையுடன் விதவை!

ஒசூர் அருகே சிறுமிக்கு 12 வயதில் திருமணம் நடைபெற்று, தற்போது 14 வயதில் கைக்குழந்தையுடன் விதவைக் கோலத்தில் உள்ளார்.

குழந்தை திருமணங்களை தடுக்க வலியுறுத்தல்

ஒசூர் அருகே சிறுமிக்கு 12 வயதில் திருமணம் நடைபெற்று, தற்போது 14 வயதில் கைக்குழந்தையுடன் விதவைக் கோலத்தில் உள்ளார். இந்தச் சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதமும் அளிக்க வேண்டும். மேலும், இப் பகுதியில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த தளி தொகுதியில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த தொகுதி முழுவதும் காடும், மலையும் ஒருங்கே அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் இருளர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மேலும், தெலுங்கு மொழி பேசுவோர் இங்கு அதிகம். தமிழில் கல்வி கற்க முடியாத நிலையில், போதிய கல்வி அறிவும் மிகக் குறைவே. வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் அளவில் நடந்து வருகிறது வருத்தத்துக்குரியது.
இந்த நிலையில், அஞ்செட்டி வட்டம், நாட்றாம்பாளைம் அருகே உள்ள என்.புதூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி முனுசாமி. அவரது மனைவி மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை.
அத் தம்பதியின் பெரிய மகள் ஆனந்தி, இவர் நாட்றாம் பாளையத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே பெற்றோரின் கட்டாயத்தின்பேரில், தாய் வழி உறவினரான காவேரி (20) என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு ஆனந்தி ஐந்து மாதக் கர்ப்பமாக இருந்த நிலையில், ஆனந்தியின் கணவர் காவேரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காவேரி இறந்து 6 மாதம் ஆன நிலையில், தற்போது 14 வயதே நிரம்பிய ஆனந்தி ஐந்து மாதமே ஆன கைக் குழந்தையுடன் தன் மாமியார் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். தன் தாய் வீட்டுக்கும் போகாமல் ஆதரவற்ற நிலையில், தன் உறவினர் வீட்டில் இருந்தபடியே கை குழந்தையோடு கூலி வேலை பார்த்து, தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இதை கண்ட சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடந்து வருகிறது. அரசு நிர்வாகம் குழந்தை திருமணத்தை நடத்துபவர்களைத் தண்டிப்பது இல்லை. மாறாக, கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.
இதுபோன்ற குழந்தை திருமணம் மேலும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஆனந்திக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மற்றும் ஒசூர் சார் -ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் தலைமையில் அரசு அதிகாரிகள் வாரத்திற்கு ஒருநாள் என மலை கிராமத்திற்குச் சென்று முகாமிட்டு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , அந்த பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com