முரசொலி அலுவலகத்தில் பவள விழா காட்சி அரங்கம் திறப்பு

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் பவள விழா சென்னையில் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பவள விழா அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
முரசொலி அலுவலகத்தில் பவள விழா காட்சி அரங்கம் திறப்பு


சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் பவள விழா சென்னையில் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பவள விழா அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் குழுமத் தலைவர் என்.ராம் இன்று காலை 10 மணிக்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன்...
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பவள விழா நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் கமல்ஹாசன், தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம், தினத்தந்தி குழுமத் அதிபர் சி.பாலசுப்ரமணிய ஆதித்தன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருண்ராம், டெக்கான் க்ரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஆனந்த விகடன் குழுமம் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

விழாவில் முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் அனைவரையும் வரவேற்கிறார். முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.

பொதுக்கூட்டம்: முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் இரா.நல்லகண்ணு பவள விழா மலரை வெளியிட, முரசொலி முதல் மேலாளர் சி.டி.தட்சிணாமூர்த்தி பெறுகிறார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்ஜிஆர் கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஒளிபரப்பு: பத்திரிகையாளர்கள் பங்கேற்கும் விழா (ஆகஸ்ட் 10) மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் (ஆகஸ்ட் 11) கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com