அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பல பிரச்னைகளில் அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பல பிரச்னைகளில் அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி. தினகரனுக்கும் இடையில் நடக்கும் சண்டைகளுக்குள் நாங்கள் நுழைய விரும்பவில்லை. அவை எல்லாம் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னைகள். இன்னொரு வீட்டில் நடக்கும் தகராறுகளை வேடிக்கைப் பார்க்கவோ, அவற்றில் தலையிடவோ நாங்கள் விரும்பவில்லை.

அதிமுக பிளவுக்கு பாஜக காரணமா, இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி. அதுபற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நீட் பிரச்னை, இந்தித் திணிப்பு போன்ற பல பிரச்னைகளில் அதிமுக அடிபணிந்து போவதற்கு பாஜக தான் காரணம் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு அணியும் அடுத்தவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். யாரெல்லாம் குற்றவாளிகள் என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அதனால் தான் நேற்றைக்கே குறிப்பிட்டேன். அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோதும், தேவைப்பட்டால் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தேன். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஏற்கனவே கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ளோம்”, என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன் அரசு மீது நாங்கள் நம்பிக்கைத் தீர்மானமே கொண்டு வரவில்லை. சபாநாயகர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.

‘குதிரை பேர’ அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, ஆளுநரின் உத்திரவின் அடிப்படையில் அது நடைபெற்றது. திமுக சார்பில் கொண்டு வரப்படவில்லை. எனவே, இதைக்கூட முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ளவில்லையே என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் என்று வருகின்றபோது, அந்தநேரத்தில் இருக்கக்கூடிய சூழலைப் பொறுத்து, திமுக ஒரு நல்ல முடிவை எடுக்கும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எனக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. எனவே, அந்த உரிமையின் அடிப்படையில் என்னை சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு செல்ல விடாமல் தடுக்க முடியாது என்று இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

எனவே, விரைவில் அங்கு இருக்கும் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துப்பேசி, ஒரு தேதியை முடிவு செய்து அறிவித்து, எடப்பாடி தொகுதியில் இருக்கக்கூடிய அந்த ஏரியை மட்டுமல்ல, தமிழகத்தில் திமுகவினர் தூர்வாரியுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் நிச்சயமாக நேரடியாகச் சென்றுப் பார்வையிடுவேன்.

நேற்றைய தினம், முரசொலி பவள விழாப் பொதுக்கூட்டம் தொடங்கவிருந்த நேரத்தில் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அந்தப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com