இன்று யானைகள் தினம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 810 யானைகள்

சத்தியமங்கலம் வனக் கோட்டத்தில் 810 யானைகள் உள்ளதாக புலிகள் காப்பக இணை இயக்குநர் அருன்லால் தெரிவித்தார்.
பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் யானை கூட்டம்.
பவானிசாகர் நீர்த்தேக்கப் பகுதியில் யானை கூட்டம்.

சத்தியமங்கலம் வனக் கோட்டத்தில் 810 யானைகள் உள்ளதாக புலிகள் காப்பக இணை இயக்குநர் அருன்லால் தெரிவித்தார்.
சத்தியமங்கலம் வனத்தில் தலமலை, பெஜலட்டி, தெங்குமரஹாடா, கேர்மாளம் ஆகிய அடர்ந்த வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் உள்ளன. யானைகள் பொதுவாக மனிதர்கள்போல பாச உணர்வு, கூட்டாக உணவு தேடுதல், குட்டிகளை வளர்த்தல், குடும்பத்துடன் வாழும் குணங்கள் கொண்டவை. தமிழகத்தில் உள்ள யானைகள் அதிகபட்சமாக 50 வயது வரை வாழக்கூடியது. பெண் யானை 13 வயதில் கருவுற்று 22 மாத காலத்தில் குட்டி ஈன்றும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவுறும்.
யானைகள் கூட்டத்தில் அதிகமாக பெண் யானைகள் இருப்பதால் தீவனம், தண்ணீர் தேடி தினந்தோறும் 10 கி.மீ. தொலைவு பயணிக்கும். ஓர் யானைக்கு தினந்தோறும் 250 கிலோ தீவனமும், 150 கிலோ தண்ணீரும் தேவைப்படும். யானைகளுக்கு வியர்வை சுரபிகள் குறைவாக இருப்பதால் தண்ணீரின்றி அதனால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாது. யானைகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால் மனித நடமாட்டத்தை உணர முடியும். எதிர்வரும் ஆபத்தைக் கணித்து எளிதாக தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவை. அதே நேரத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு நிலத்தில் மணலைப் பறித்து தண்ணீர் எடுத்து குடிக்கும் ஆற்றல் உடையவை யானைகள். ஆண் யானைக் குட்டி பருவ வயதை எட்டும்போது மற்ற யானைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் தனிமைப்படுத்தி வெளியேற்றும். இதனால், பெரும்பாலான ஆண் யானைகள் தனித்தே திரிவதால் அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதும், மனித விலங்குகள் மோதல் ஏற்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் வாழ்வதற்கான ஏற்ற இயற்கை சூழல் தட்பவெப்பநிலை உள்ளது. யானைகள் விரும்பி சாப்பிடும் மூங்கில், புல், தேக்கு மரப்பட்டை, ஊஞ்சல் மரக்கிளைகள் சத்தியமங்கலம் வனத்தில் அதிக அளவில் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 800 யானைகள் உள்ளன. அதில், சுமார் 200 யானைகள் சத்தியமங்கலம் வனத்தில் தங்கி அதே இடத்தில் வாழும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. மீதமூள்ள யானைகள் வறட்சியாக இருக்கும் தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் முதுமலை, கர்நாடகத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனச் சாலையில் யானைகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்லும். தீவனம், தண்ணீர் தேடி செல்லும்போது குட்டியுடன் யானைகள் செல்வதைக் காண முடியும். கடந்த சில ஆண்டுகளாக தந்தத்துக்காக யானைகளை குறிவைத்து வேட்டையாடுவது முற்றிலும் குறைந்துள்ளது. ஆனால், விவசாயிகள் பயிர்களைப் பாதுகாப்பதற்கு அமைத்திருக்கும் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதும், தோட்டத்தில் உள்ள யூரியா போன்ற விஷத் தன்மையுள்ள பொருள்களைச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் அவை உயிரிழந்துள்ளன.
காடு வளர்ப்பில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானைகள் சாப்பிடும் தீவனத்தில் மூலிகை மரங்கள் அதிகமாக இருக்கும். யானைகளின் சாணத்தில் விதைகள் இருப்பதால் அவற்றில் இருந்து செடிகள் முளைத்து மரங்களாக உருவெடுக்கும். அவை போகும் வழியில் சாணம் விழுவதால் அங்கெல்லாம் மரங்கள் வளரும். யானைகளால் காடு மேம்படுவதால் யானைகளைப் பாதுகாக்குமாறு சுற்றுச்சூழல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
யானைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வனப் பண்ணை அமைத்து செடிகள் வளர்க்கப்படுகிறது. வனத்தில் ஆழ்துளை மூலம் நீர்நிலைகள் ஏற்படுத்தியும், தண்ணீர் தொட்டி அமைத்தும் 2 சதுர கி.மீ. தொலைவில் ஆங்காங்கே வெள்ளநீரை தடுத்து வனக் குட்டை அமைத்தும், அவற்றின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து வருவதாக மாவட்ட வனஅலுவலர் அருண்லால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com