கும்பகோணம் பள்ளி தீ விபத்து: மேல்முறையீடு செய்ய இந்திய கம்யூனிஸ்ட், பாமக வலியுறுத்தல்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தற்போதைய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தற்போதைய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
இரா.முத்தரசன்: கும்பகோணத்தில் கடந்த 2004 -ஆம் ஆண்டு நடைபெற்ற தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் தீக்கு பலியாகினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கியத் தீர்ப்பில், விபத்துக்குக் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 11 பேரை விடுவித்தும், 10 பேருக்கு தூக்கு தண்டனை அளித்தும் உத்தரவிட்டது. இதில் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், தண்டனை பெற்றவர்கள் சார்பிலும் உயர்
நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. இதில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தங்களுடைய குழந்தைகளைப் பறிகொடுத்து, நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனப் பல ஆண்டுகளாக காத்திருந்த பெற்றோருக்கு அநீதிதான் கிடைத்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்: கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தக் கொடுமைக்கு காரணமானோர் மீது எந்த வகையிலும் இரக்கம் காட்டத் தேவையில்லை.
வழக்கில் தொடர்புடைய தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2014 -ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பால் மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்களும் தற்போது விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், குழந்தைகளைத் தீக்குப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்?
குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஆனால், குற்றமிழைத்தவர்களுக்கு எளிதாக விடுதலை கிடைத்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com