கோயம்புத்தூர்-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம்

கோயம்புத்தூர்-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்ற டபுள் டெக்கர் ரயில்.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் நின்ற டபுள் டெக்கர் ரயில்.

கோயம்புத்தூர்-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக டபுள் டெக்கர் ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து காலை 7.15-க்கு புறப்பட்டு 12.45-க்கு பெங்களூரு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.15-க்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு சென்னை வந்தடைகிறது. பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கோயம்புத்தூரில் இருந்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வழியாக பெங்களூரு வரை மற்றொரு டபுள் டெக்கர் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, கோயம்புத்தூரில் இருந்து திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு டபுள் டெக்கர் ரயில் 4 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த ரயில், திருப்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயில்வே அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரி லியோ டால்டாய்ஸ் கூறியதாவது:
சென்னையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் டபுள் டெக்கர் ரயிலைப் போல, கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு டபுள் டெக்கர் ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மாலை 3.30 மணிக்கு திருப்பத்தூர் வந்து, பின்னர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்கிறது.
இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் நேரம், பெங்களூரு சென்றடையும் நேரம் விரைவில் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும்.
இன்னும் 10 நாள்களுக்குள் அதிகாரபூர்வமாக இவ்வழித் தடத்தில் இந்த ரயில் நாள்தோறும் இயக்கப்படும். மேலும் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com