பண்ருட்டி பகுதியில் கன மழை: ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: விளை நிலங்கள், சாலை, பாலங்கள் சேதம்

பண்ருட்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால், வெள்ளவாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் புகுந்தது. பல ஏக்கர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கின.
காட்டாற்று வெள்ளத்தால் விசூர் கிராமத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
காட்டாற்று வெள்ளத்தால் விசூர் கிராமத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

பண்ருட்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால், வெள்ளவாரி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் புகுந்தது. பல ஏக்கர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கின. பெரியகாட்டுப்பாளையம், விசூர், கருக்கை கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட மக்கள் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த கனமழையால் கடும் பாதிப்பைச் சந்தித்தது. பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகாட்டுப்பாளையம், விசூர் கிராமங்களில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மின்னலுடன் மழை பெய்தது. அதிகாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது.
பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை நீரானது வெள்ளவாரி மற்றும் இதர ஓடைகள் வழியாக காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்ததில் விசூர், கருக்கை, பெரியகாட்டுப்பாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல், கம்பு பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் சில பகுதிகளில் விவசாய நிலங்கள் மண்மேடாகியுள்ளன.
கருக்கை - விசூர் வழித்தடத்தில், விசூரில் உள்ள தரைப்பாலமும், மேட்டுக்குப்பம், பெரியகாட்டுப்பாளையம் பகுதிகளில் தலா ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டுமானப் பணி நடந்து வரும் சிறுபாலம் அருகே அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதைகளும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதேபோல், விசூர்-சேந்தநாடு சாலையில், சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், வெள்ளவாரி ஓடையின் கரை ஓரம் அடுக்கியிருந்த மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு கரைகள் சேதமடைந்தன. இதேபோல, மற்றொரு மழை பெய்தால், ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளவாரி ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் எங்களது சொந்தங்களையும், வீடு மற்றும் உடைமைகளையும் இழந்தோம். விளை நிலங்கள் மண் மேடாகின. வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளவாரி ஓடைக் கரைகள் மீண்டும் சேதமடைந்துள்ளன. கரையோரம் அடுக்கப்பட்ட மணல் மூட்டைகள் காட்டாற்று வெள்ளத்தில் கரைந்துவிட்டன. விவசாய நிலங்களில் சுமார் 2 அடி உயரத்துக்கு மண் சேர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கம்பு பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எங்களது உயிருக்கும், உடைமைக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்றனர்.
கடலூரில் 51.60 மி.மீ மழை: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 51.60 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: வானமாதேவி 35, பண்ருட்டி 33, சேத்தியாத்தோப்பு 14, விருத்தாசலம் 10, மேல்மாத்தூர் 9, தொழுதூர் 5, பரங்கிப்பேட்டை 3, புவனகிரி 2.
இந்த மழையால் விருத்தாசலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளான கோபாலபுரம், கார்கூடல், குமாரமங்கலம், கம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை காண்பிக்கும் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com